தமிழ்நாடு

செல்லாதுணு யார் சொன்னது? மூட்டை மூட்டையாக 10 ரூபாய் நாணயங்களுடன் கார் ஷோரூம் வந்த இளைஞர்!

செல்லாதுணு யார் சொன்னது? மூட்டை மூட்டையாக 10 ரூபாய் நாணயங்களுடன் கார் ஷோரூம் வந்த இளைஞர்!

JananiGovindhan

மூட்டை மூட்டையாக 10 ரூபாய் நாணயத்தை கொண்டு வந்து 6 லட்ச ரூபாய் மதிப்பிலான காரை வாங்கியிருக்கிறார் அரூரைச் சேர்ந்த இளைஞர்.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களை தவிர 10 ரூபாய் நாணயங்களை நடத்துநர்கள், வணிகர்கள், வியாபாரிகள் என எவருமே வாங்குவதற்கு தயக்கம் காட்டுவது தொடர்ந்து வருகிறது.

ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என தொடர்ந்து கூறப்பட்டு வந்தாலும் வங்கிகளிலேயே 10 ரூபாய் நாணயத்தை வாங்க மாட்டோம் என அறிவிப்பு பலகையிலேயே பகிரங்கமாக ஒட்டி வைத்திருக்கும் நிகழ்வும் அரங்கேறியிருக்கிறது. இதனால் மக்களுமே பத்து ரூபாய் நாணயத்தை பயன்படுத்த ஆர்வம் செலுத்துவதில்லை.

இப்படி இருக்கையில் தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த வெற்றிவேல் என்ற இளைஞர் 10 ரூபாய் நாணயங்களை 6 லட்ச ரூபாய் வரை சேமித்து அதனை வைத்து ஒரே காரே வாங்கியிருக்கிறார்.

மழலையர் பள்ளி நடத்தி வரும் வெற்றிவேலின் தாயார் வீட்டிலேயே சிறிய கடை ஒன்றினை நடத்தி வருகிறார். அவரது கடையில் கொடுக்கப்படும் 10 ரூபாய் நாணயங்கள் அப்பகுதி சிறுவர்கள் செல்லாத காசு என எண்ணி விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறார் வெற்றிவேல்.

இதனையடுத்து தான், ரூ.10 நாணயங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என எண்ணி தேடித்தேடி சென்று 10 ரூபாய் நாணயத்தை ரூ.6 லட்சம் வரை வெற்றிவேல் சேமித்திருக்கிறார்.

ALSO READ: 

அதன்படி ஒரு மூட்டையில் ₹20,000 முதல் 30,000 வரை என 15க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 480 கிலோ அளவுக்கு 6 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள பிரபல கார் டீலரை அணுகி அங்கு கார் வாங்க வெற்றிவேல் முற்பட்டிருக்கிறார்.

முதலில் தயங்கிய கார் நிறுவன ஊழியர்கள் வெற்றிவேலின் எண்ணத்தை அறிந்து அவரிடம் இருந்த நாணயங்களை வெற்றிவேலின் குடும்பத்திடன் உதவியுடன் எண்ணி முடித்து காரை வழங்கியிருக்கிறார்கள்.

காரை பெற்றுக்கொண்ட மனநிறைவோடு வெற்றிவேல் குடும்பத்தினர், அதில் பயணித்து சென்றனர். இந்த நிகழ்வு பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை.

ALSO READ: