தமிழ்நாடு

முதல் நாளிலேயே 78 கேள்விகள்! நாளையும் விசாரணைக்கு ஆஜராக ஓபிஎஸ்க்கு உத்தரவு

முதல் நாளிலேயே 78 கேள்விகள்! நாளையும் விசாரணைக்கு ஆஜராக ஓபிஎஸ்க்கு உத்தரவு

Veeramani

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று ஆஜரான நிலையில், நாளை காலை மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை தொடரும் என ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை ஓ.பி.எஸ்சிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 78 கேள்விகள் கேட்கபட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆணையத்தில் நீண்ட நாட்களாக ஆஜராகமல் இருந்து வந்த நிலையில், இன்று முதன் முதலாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ் ஆஜரானார். இன்று மொத்தமாக மூன்றரை மணி நேரம் நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. காலை மற்றும் பிற்பகல் நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுவரை 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இன்று நடந்த விசாரணையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோரிடம் சொல்லி இருந்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது, அப்பல்லோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என சி.விஜயபாஸ்கர் சொன்னதாக கூறியுள்ளார்.



மேலும், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின்போது  சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என்றும், தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.