தமிழ்நாடு

அழியாத கோடுளைத் தீட்டிய ஓவியர் வீர சந்தானம் காலமானார்

அழியாத கோடுளைத் தீட்டிய ஓவியர் வீர சந்தானம் காலமானார்

webteam

புகழ்பெற்ற தமிழ் ஆர்வலரும் ஓவியருமான வீரசந்தானம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. 
மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீரசந்தானத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 தமிழ் பண்பாட்டின் ஆழத்திலிருந்து ரத்தமும் சதையுமாக வரைந்த ஓவியங்களால் எட்டுத்திக்கும் கொடி கட்டிப்பறந்த ஓவியர் வீரசந்தானம் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த உப்பிலியப்பன் கோவிலைப் பூர்மீகமாகக் கொண்டவர். சலசலத்துப்பாயும் ஆறுகளும், உப்பிலியப்பன் கோவில் சிற்பங்களும் ஏற்படுத்திய தாக்கத்தில் ஓவியராக மிளிர்ந்தார் வீரசந்தானம்.
அவரது வீரியமிக்க கோடுகள், அல்போன்சோவின் கிறிஸ்தவக் கதை, நடராஜரின் நாட்டியத்தை சித்தரிக்கும் ஓவியங்களாய் வீரசந்தானத்தின் இதயத்தில் கோடுகளாக ஊர்ந்து அவரை ஓவியராக பரிணமிக்கச் செய்தன. அத்தோடு, ஓவியர்கள் தனபால், அந்தோணிதாஸின் ஓவியத் தாக்கம் வீர சந்தானத்திற்குள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
பழந்தமிழகத்தின் நாட்டார் கூறுகளையும், பாரம்பரியமிக்க தென் திராவிட கோயில் சிற்பங்களையும் உள்ளடக்கி வீரசந்தானம் படைத்துக்காட்டிய ஓவியங்கள் தமிழக ஓவியக் கலையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தன. இளவயதிலேயே மும்பையில் உள்ள நெசவாளர் பணி மையத்தில் வடிவமைப்பாளராக பணியில் சேர்ந்த வீரசந்தானம், தமிழினத்திற்கான போராட்டங்களில் தன்னை ஐக்கியப்படுத்தி கொள்வதற்காக விருப்ப ஒய்வு பெற்றார். 
பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான சந்தியா ராகம் படத்தில் வீரசந்தானம் ஓவியராகவே வளம் வந்து தமிழ் மக்களின் இதயத்தில் இடம் பிடித்தார். தெருக்கூத்து கலைஞர்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட அவள் பெயர் தமிழரசி, கத்தி, பீட்சா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் வீரசந்தானம்.
தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஓவியத்திறமையால் தத்ரூபமாக உருவாக்கிய பெருமை வீரசந்தானத்தையே சாரும். காலத்தால் அழியா ஓவியங்களைப் படைத்த வீரசந்தானத்தின் ஆற்றலுக்கு, அகில இந்திய தொழிற்துறை கண்காட்சியின் விருது 1997 ஆம் ஆண்டு கிடைத்தது. சிறந்த ஓவியத்திற்கான தேசிய விருது 1988 ஆம் ஆண்டு பெற்றார். வன விலங்குகளின் வாழ்க்கை பற்றிய புகைப்படத்திற்கான விருதை 1975 ஆம் ஆண்டும், சிறந்த ஓவியங்களைப் படைத்தமைக்காக 1990 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருதும் வீரசந்தானத்தை அழகுபடுத்தின.
தமிழ் சமூக வரலாற்றில் அழிக்க முடியாத கோடுகளை தீட்டிய வீரசந்தானம், மரணத்தின் படுக்கையில் ஓவியமாகக் கிடத்தப்பட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் உரிமைக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய வீரசந்தானத்தின் மறைவு, தமிழ் உணர்வுள்ள அனைவருக்கும் பேரிழப்பே.