தமிழ்நாடு

ஆர்சனிகம் ஆல்பம் மாத்திரையை மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் சமூக ஆர்வலர்..!

ஆர்சனிகம் ஆல்பம் மாத்திரையை மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் சமூக ஆர்வலர்..!

webteam

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தன் சொந்த செலவில் பொது மக்களுக்கு இலவசமாக ஆர்சனிகம் ஆல்பம் மாத்திரையை விநியோகித்து வருகிறார்.

இது குறித்து அவரை தொடர்பு கொண்டு பேசினோம், “என் பேர் சிவகுரு. எனக்கு ஐம்பத்தெட்டு வயது. குறிஞ்சிப்பாடி டவுனில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக மருந்துக்கடை நடத்தி வந்தேன். இப்போது என் பிள்ளைகளுக்கு நல்ல வசதி வாய்ப்பு வந்து விட்டதால் மருந்துக் கடையை மூடி விட்டேன். மருந்துக் கடை நடத்தி வந்த போதே, மருந்து நிறுவனங்களின் ஒப்புதலோடு அவ்வபோது முகாம்களை நடத்துவது வழக்கம்.

அப்போதுதான் உள்ளூரில் செயல்பட்டு வரும் அரிமா சங்கத்தினர் மற்றும் தன்னார்வல அமைப்புகளின் அறிமுகம் கிடைத்தது. மருந்துக் கடையை மூடிய பிறகும் கூட மக்களுக்கான மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வந்து, அதன் மூலம் நோய் சார்ந்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறேன். இப்போது கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகமாக இருப்பதால் ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரைப்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரையான ‘ஆர்சனிகம் ஆல்பம் 30சி’ மாத்திரையை எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு கொடுத்து வருகிறேன்.

தொடக்கத்தில் எனது சொந்த செலவில் தான் மாத்திரைகளை வாங்கி கொடுத்தேன். அதன் பின்னர் பல நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள் நிதி உதவி அளித்தனர். கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஆர்சனிகம் ஆல்பம் மாத்திரைகளை மக்களிடம் கொடுத்து வருகிறேன். குறிஞ்சிப்பாடியில் என்னால் முடிந்தவரை மக்களுக்கு மாத்திரைகளை கொடுத்துள்ளேன். தமிழ்நாடு முழுவதும் இந்த மாத்திரையை கொடுக்க விரும்புகிறேன்" என்றார்.