வீரமணி pt web
தமிழ்நாடு

“10 செகண்ட்தான்” ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது எப்படி? கண்ணீருடன் அவரது அண்ணன் வீரமணி சொன்ன பகீர் தகவல்!

கொலை நடந்தது எப்படி என்பது குறித்து ஆம்ஸ்ட்ராங் அண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் தாக்கப்பட்ட தகவலை அறிந்து சென்றபோது எனக்கும் வெட்டு விழுந்தது என ஆம்ஸ்ட்ராங் அண்ணன் வீரமணி தெரிவித்துள்ளார்.

PT WEB

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சித்தலைவர்கல் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்து, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலு செலுத்தினார்.

படுகொலை தொடர்பாக அவர் பேசுகையில், “ஆம்ஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் மிகவும் அர்ப்பணிப்புடன் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங். அவரது படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்

இந்நிலையில் கொலை நடந்தது எப்படி என்பது குறித்து ஆம்ஸ்ட்ராங்கின் அண்ணன் வீரமணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “கோவிலில் இருக்கும்போது திடீரென ஒரே சத்தமாக இருந்தது. என்ன சத்தம் என ஓடிவந்து பார்த்தபோது, ஆம்ஸ்ட்ராங்கை வெட்டுகிறார்கள் என சத்தம்போட்டுக்கொண்டு எல்லோரும் ஓடுகிறார்கள். இதைக் கேட்டதும் சம்பவம் நடந்த இடத்திற்கு ஓடினேன். அப்போது இரண்டு மூன்று பேர் கத்தியை வைத்துக் கொண்டு எதிரில் ஓடிவருகிறார்கள்.

ஒருத்தர் வெட்டும்போது நான் தப்பிவிட்டேன். இரண்டாவதாக வந்தவர் வெட்டும்போதும் நான் தப்பி ஓடினேன். வேட்டி கட்டி இருந்ததால் தடுக்கி கீழே விழுந்துவிட்டேன். அப்போது மூன்றாவது நபராக வந்தவர் என்ன தலையில் வெட்டிவிட்டார். கீழே விழுந்ததும் முதுகிலும் ஒருவர் வெட்டினார். அதையும் பொருட்படுத்தாமல் தம்பியிடம் ஓடினேன்.

அவரை எழுப்பினேன். அவர் இரத்த வெள்ளத்தில் இருக்கிறார். எனக்கும் வெட்டு விழுந்ததால் மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன். என் மனைவி வந்தார். துணி எடுத்து தலையில் அழுத்தி மருத்துவமனைக்கு கொண்டுசென்றுவிட்டார். வெட்டியவர்கள் வேறுபக்கம் ஓடுவார்கள் என நினைத்தேன். எனக்கு எதிரே ஓடிவந்ததால் எனக்கு வெட்டு பட்டது.

குற்றவாளிகளை நான்பார்க்கவில்லை. 10 செகண்டு தான். கத்தி என்னைப் பார்த்து வந்ததைத்தான் நான் பார்த்தேன். வந்தவர்கள் யார் என பார்த்திருந்தால் முதலிலேயே வெட்டு விழுந்திருக்கும். அவர்களது உடை என எதையும் நான் கவனிக்கவில்லை. என் சகோதரருக்கு எதிரிகள் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் அவர் தனியாகலாம் செல்லமாட்டார் அல்லவா?” என தெரிவித்தார்.