ஆம்ஸ்ட்ராங்  pt web
தமிழ்நாடு

‘ஜெய்பீம்ணா’.. ஒலித்த குரலை நம்பிச் சென்ற ஆம்ஸ்ட்ராங்.. அடுத்த நொடியில் நடந்த கொலை.. நடந்தது என்ன?

”பைக்கில் வந்த ஸ்விகி ட்ரஸ் போட்டவன் உன்னை தன்னிடம் வரவழைக்க ‘ஜெய்பீம்ணா’ என சொன்னதும் அவனருகே நீ சென்றபோதுதான் அவன் க*த்தியை எடுத்திருக்கிறான் என இரங்கல் கூட்டத்தில் யாரோ சொல்லி கேட்டபோதுதான் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை” எழுத்தாளர் தமிழ்பிரபா

இரா.செந்தில் கரிகாலன்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. புதிதாக வெளிவரும் தகவல்கள்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆர்ம்ஸ்ட்ராங்கின் கொலை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பற்றவைத்தது... செம்பியம் காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்தது... குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன... இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது எப்படி என்று பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன... அந்தவகையில், தற்போது, ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது குறித்துப் பார்ப்போம்

ஆம்ஸ்ட்ராங்

பெரம்பூரில் உள்ள தன் வீட்டில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால் அயனாவரத்தில் குடும்பத்தினருடன் தற்காலிகமாக குடியிருந்து வந்த ஆம்ஸ்ட்ராங், நாள்தோறும் பெரம்பூர் வந்து கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டுச் செல்வது வழக்கம். அந்தவகையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெரம்பூர் வீட்டுக்கருகே பாலாஜி என்பவருடன் நின்று பேசிக்கொண்டிருந்திருக்கிறார் ஆம்ஸ்ட்ராங். அப்போது, உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. கொலையாளிகள் தப்பிச்செல்லும் வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வெளியானது.

‘ஜெய்பீம்ணா’... ஒலித்த குரல் நம்பிச் சென்ற ஆம்ஸ்ட்ராங்

கொலை நிகழ்ந்த இடத்தின் அருகே பிரபல உணவகம் இருக்கிறது... அங்கு எப்போதும் தனியார் உணவு டெலிவரி ஊழியர்கள் குவிந்திருப்பார்கள்... அதை தங்களுக்குத் சாதகமாக்கியே சரியாக திட்டமிட்டு கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தின்போது அருகில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் அண்ணன் வீரமணி இந்தக் கொலை பற்றி கூறுகையில், “உணவு டெலிவரி செய்வது போல் வந்தனர். ஆம்ஸ்ட்ராங் அருகில் இருந்த பாலாஜியிடம் உணவு டெலிவரி வந்துள்ளதாக கூறினார்கள். எந்த உணவு என்று கேட்கையில் அவரை தள்ளிவிட்டுவிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினார்கள். தகவல் அறிந்து வந்த எனக்கும் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்” என்று கூறியிருந்தார்...

ஆனால், உணவு வினியோகம் செய்ய வந்தவர்களில் ஒருவர், `அம்பேத்கர் வாழ்க’ என்று குறிக்கப் பயன்படும் முழக்கமான “ஜெய்பீம்ணா” என ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி கையை உயர்த்தியிருக்கிறார்... உடனே, அவரருகே சென்று அவரோட பேச ஆம்ஸ்ட்ராங் முயற்சி செய்திருக்கிறார்... அப்போது மேலும் சிலர் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அந்த குறுகிய சந்துக்குள் திபுதிபுவென ஓடிவந்து அவரை சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு மற்றவர்கள் வந்தபோது அவரை வெட்டியவர்கள் தப்பி ஓடியிருக்கிறார்கள்...

ஆதரவாளர்கள் கூறுவதென்ன?

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பொத்தூரில் இந்தத் தகவல்கள் பரவியதோடு, எழுத்தாளரும் வசனகர்த்தாவுமாகிய தமிழ்ப்பிரபாவும் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “பைக்கில் வந்த ஸ்விகி ட்ரஸ் போட்டவன் உன்னை தன்னிடம் வரவழைக்க ‘ஜெய்பீம்ணா’ என சொன்னதும் அவனருகே நீ சென்றபோதுதான் அவன் க*த்தியை எடுத்திருக்கிறான் என இரங்கல் கூட்டத்தில் யாரோ சொல்லி கேட்டபோதுதான் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. எத்தனை நம்பிக்கையுடனும் பிரியத்துடனும் நீ அவனருகே சென்றிருப்பாய்” என பகிர்ந்திருக்கிறார்..,

“தான் நேசிக்கும் தலைவர் குறித்த முழக்கத்தை முன்வைத்ததாலேயே நம்பிக்கையாக அவர் பக்கத்தில் சென்றிருக்கிறார்... இல்லையென்றால் ஆம்ஸ்ட்ராங்கை அவ்வளவு ஈசியாக மற்றவர்கள் நெருங்கமுடியாது” என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்...