சீசிங் ராஜா PT
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆந்திராவில் பதுங்கியிருந்த ரவுடி சீசிங் ராஜா போலீஸை கண்டதும் தப்பியோட்டம்!

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, அருள், ராமு உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஏற்கனவே போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்ட பொன்னை பாலு, அருள், ராமு ஆகியோரை மீண்டும் மூன்று நாள் போலீஸ் கவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங்

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அருள் முக்கிய நபராக செயல்பட்டுள்ளதால் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அருள் மூலமாகவே பணம் கைமாறி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் அவரது வங்கிக் கணக்கு முழுவதையும் முடக்கியுள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவத்திற்கு திட்டமிட்ட இடங்களுக்கு அருளை நேரடியாக காவல்துறை பாதுகாப்பாக அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

அதேபோல், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிதரனையும் 5 நாள் காவலில் எடுத்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரிதரனிடம் கொலைக்கு ரவுடிகள் பயன்படுத்திய செல்போன்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த செல்போனைகளை உடைத்து கொசத்தலை ஆற்றில் வீசியது தெரியவந்ததை அடுத்து ஆற்றில் வீசப்பட்ட செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து அந்த செல்போன்களை தடயவியல் மற்றும் சைபர் கிரைம் துறைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.

Accused

இதைத் தொடர்ந்து நாளையுடன் பொன்னை பாலு, அருள், ராமு ஆகியோரின் போலீஸ் கஸ்டடி நிறைவடைகிறது. அதற்குள்ளாக ஹரிதரன் கூறும் விவரங்களின் அடிப்படையில் பொன்னை பாலு, அருள் ஆகியோரிடம் விசாரணையை இறுக்கி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டுக்கு சோழவரம் அருகே எண்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி முத்து சரவணன் கூட்டாளி ரவுடி வைரமணி என்பவரை போலீசார் திருநெல்வேலியில் கைது செய்தனர். அவரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் தொடர்ப்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ரவுடி முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகியோர் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். அவர்களின் கூட்டாளியான வைரமணி சென்னையிலிருந்து வேறு ஊருக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை தற்போது போலீஸ் பிடித்துள்ளது. சென்னையின் ரவுடி கும்பலோடு வைரமணிக்கு தொடர்பு இருப்பதால் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா என விசாரணை விரிவடைந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார், வைரமணியிடம் விசாரணை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சீசிங் ராஜா காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் தனது இரண்டாவது மனைவி வீட்டில் பதுங்கியிருந்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் அவரை பிடிக்க முயற்சித்தனர். அப்பொழுது காவல்துறையினரை கண்டதும் அவர் தப்பியோடியுள்ளார்.