ஆம்ஸ்ட்ராங் படுகொலை - சரணடைந்தவர்கள் pt web
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை | கைது செய்யப்பட்டவர்களில் திமுகவினர் யாருமே இல்லை? அடித்து சொல்லும் ரவீந்திரன்!

இரா.செந்தில் கரிகாலன்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், படுகொலை வழக்கில் பல்வேறு தரப்பினருக்கு தொடர்பிருப்பதாக அடுத்தடுத்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது... இவர்களில் ஒரு சிலர் அரசியல் கட்சிகளிலும் நிர்வாகிகளாக இருக்க, அவர்களின் மீது கட்சி சார்ந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.. இதுவரை, அதிமுக, தமாக, பாஜக நிர்வாகிகள் என மூன்று பேர் அந்தந்த கட்சிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்... ஆனால், திமுக நிர்வாகி எனச் சொல்லப்படும் ஒருவர்மீது மட்டும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை... அது ஏன்?

Armstrong murder case

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 11 பேரை அடுத்தடுத்து கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். பின்னர் கைதான 11 பேரையும் 5 நாள்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர்.

இதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டிக் கொடுத்ததோடு, முதல் தாக்குதல் நடத்தியது திருவேங்கடம் என்பது தெரியவந்தது. அவர், பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை எடுப்பதற்காக, காவல்துறை அழைத்துச் சென்றபோது, என்கவுண்டர் செய்யப்பட்டார்... ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் திருவேங்கடம் போலீஸாரை சுட, தற்காப்புக்காக அவரைச் சுட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. மற்ற 10 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, சிறையில் இருக்கும் திருநின்றவூரை சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள் என்பவர், கொலையில் முக்கிய பங்காற்றியது தெரியவந்தது.

திமுக நிர்வாகி மட்டும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை..

இவர், இந்தக் கொலையில் முக்கியமானவராகப் பார்க்கப்படும் பொன்னை பாலுவின் மைத்துனர் அவர். அருளின் செல்போன் உரையாடல்கள், வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணை செயலாளர் மலர்கொடியுடன் பண பரிவர்த்தனை நடந்துள்ள விவரங்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மலர்கொடியின் உதவியாளராக இருந்த பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் மூலமாகவும் கொலையாளிகளுக்கு ரூ.1 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இவர், தமாகா மாநில மாணவர் அணி துணைத் தலைவராக இருந்தவர். இவர்களுடன் திமுக திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ் என்பவரும் இணைந்து செயல்பட்டுள்ளார். மேலும், திருநின்றவூரை சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ் என்பவரும் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளார்.

ஆற்காடு சுரேஷ், புன்னை பாலா, ஆம்ஸ்ட்ராங்

இந்தநிலையில், கைது செய்யப்பட்டுள்ள அதிமுக நிர்வாகியான மலர்க்கொடி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல, தமாகா மாநில மாணவர் அணி துணை தலைவராக இருந்த ஹரிஹரன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். போலீஸாரால் தேடப்பட்டு வந்து தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள பாஜக பெண் நிர்வாகி அஞ்சலையும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், திமுக நிர்வாகியான அருள் என்பவர் மட்டும் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை... அது திமுக மீது விமர்சனங்களாகவும் முன்வைக்கப்படுகின்றன.

திமுகவினர் சொல்வதென்ன?

இந்தநிலையில், இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.., “தி.மு.க-வைச் சேர்ந்த எந்த நிர்வாகியும் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் சம்மந்தப்படவில்லை... அப்படி ஒருவேளை இருந்திருந்தால், திமுகவின் தலைவராக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பார். பா.ஜ.க, அதிமுக நிர்வாகிகள் மாட்டியிருப்பதால், தி.மு.க நிர்வாகி, திமுக நிர்வாகியின் பையன் என வேண்டுமென்றே தி.மு.க-வை இழுத்து விடுகிறார்கள்... தி.மு.க-வில் தலைமையிலிருந்து அதிகாரபூர்வமாக நிர்வாகியாக அறிவிக்கப்பட்ட யாரும் இதில் சம்மந்தப்படவில்லை. செய்திகளில் வெளியாகும் தகவல்களை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். தி.மு.க பெயரை இழுப்பவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றார் அவர்.