தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மியால் தொடரும் விபரீதம்... ஆயுதப்படை காவலர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியால் தொடரும் விபரீதம்... ஆயுதப்படை காவலர் தற்கொலை

PT

கோவை அரசு பொருட்காட்சி வளாகத்தில் நேற்று பிற்பகல் பணியில் இருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அரசு துறைகளில் சார்பில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மாநகர காவல்துறை சார்பிலும் அரங்கு அமைக்கப்பட்டு அதில் மாநகர காவல் துறையில் உள்ள நவீன உபகரணங்கள் மற்றும் காவல்துறையினரின் சாதனைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அரங்கில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று பிற்பகல் அங்கு பணியில் இருந்த விருதுநகரை சேர்ந்த காளிமுத்து என்ற காவலர் தனது துப்பாக்கியை கொண்டு தனக்குத்தானே சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், படுகாயம் அடைந்திருந்த காவலரை மீட்டு கோவை பந்தையசாலை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த காவலர் காளிமுத்துவிற்கு நேற்று மாலை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கிட்னி செயலிழந்த அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவில் காவலர் காளிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காவலர் காளிமுத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததும் அதனால் லட்சக்கணக்கில் நஷ்டமடைந்து பல லட்சம் ரூபாய் கடன் பெற்று சிரமப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள சூழலில் கடன் தொல்லை காரணமாக பள்ளியில் கூட சேர்க்காததால் வீட்டில் பிரச்ணை நிலவி வந்ததும் அதனால் மன விரக்தியில் இருந்த காவலர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் வீட்டிலிருந்து பணிக்கு புறப்பட்டு சென்று 3.15 மணியளவில் பொருட்காட்சி அரங்கில் யாரும் இல்லாத சமயத்தில் தான் வைத்திருந்த எஸ் எல் ஆர் ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவை பந்தய சாலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளைப் பயன்படுத்தி பலர் பாதிக்கப்படுவது தொடர்பாக தமிழக டிஜிபி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் காவலர் ஒருவரே ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளது சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் நிலையில் அரசு அதிரடி நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.