தமிழ்நாடு

வாடிக்கையாளர் சேவையில் சுணக்கம்? அதிரடி காட்டிய அரியலூர் நுகர்வோர் குறைதீர்வு ஆணையம்!

வாடிக்கையாளர் சேவையில் சுணக்கம்? அதிரடி காட்டிய அரியலூர் நுகர்வோர் குறைதீர்வு ஆணையம்!

PT

பூர்வீகா மொபைல்ஸின் அரியலூர் கிளை மேலாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

அரியலூர் மின்நகரில் வசித்து வருபவர் மோகன். இவர் அரியலூர் மார்க்கெட் தெருவில் இயங்கிவரும் பூர்வீகா மொபைல்ஸில் கடந்த 2019 ஆம் ஆண்டு 20 ஆயிரம் பணம் செலுத்தி புதிய செல்ஃபோனை வாங்கியுள்ளார். பின்னர் செல்ஃபோன் வாங்கப்பட்ட ஒரு மாதத்தில் இரண்டு முறை பிரச்னை ஏற்பட்ட நிலையில் தற்காலிகமாக அந்த நிறுவனம் செல்ஃபோனை சரிசெய்து கொடுத்துள்ளனர். மீண்டும் செல்ஃபோனில் பிரச்சனை ஏற்பட்டபோது செல்ஃபோனை பெற்றுக்கொண்டு புதிய செல்ஃபோனை வழங்குமாறு மோகன் கேட்டுள்ளார்.

ஆனால் அதனைப் பெற்றுக்கொண்ட விற்பனையாளர் சரிசெய்து தரவோ அல்லது புதிய செல்ஃபோனையோ வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் செல்ஃபோன் வாங்கியவர் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் புதிய செல்ஃபோன் மற்றும் இழப்பீடாக 20 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்நிலையில் தீர்ப்பளித்த தொகை மற்றும் செல்ஃபோனை, அந்த நிறுவனம் வழங்காத காரணத்தால், கடந்த நவம்பர் மாதம் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மோகன் மீண்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமராஜ் அடங்கிய குழுவினர், பூர்வீகா மொபைல்ஸின் அரியலூர் கிளை மேலாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.