Old women rescued pt desk
தமிழ்நாடு

அரியலூர்: தண்ணீர் இல்லா கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி – பத்திரமாக மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

webteam

செய்தியாளர்: வெ.செந்தில்குமார்

கடலூர் மாவட்டம் வானமாதேவி மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி செல்வி (80). மூதாட்டியான இவர், மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் - கடாரங்கொண்டான் செல்லும் சாலையில் அமைந்துள்ள கொடப்பேரி அருகே மூதாட்டி செல்வி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நடுக்காட்டில் உள்ள தண்ணீர் இல்லா 20 அடி ஆழ கிணற்றில் அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

old women rescued

இந்நிலையில், மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது மூதாட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். உடனடியாக அவர்கள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களான டிரைவர் குமரவேல், டெக்னீசியன் பிரேமா ஆகிய இருவரும் பொது மக்களின் உதவியுடன் தண்ணீரில்லா கிணற்றில் விழுந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார்.

கிணற்றில் விழுந்த மூதாட்டிக்கு கையில் லேசாக முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் உதவியுடன் மூதாட்டியை பத்திரமாக மீட்ட ஓட்டுநர் குமரவேல் டெக்னீசியன் பிரேமா ஆகியோரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.