தமிழ்நாடு

தொடக்கம் முதல் இறுதிவரை முன்னிலை: 72 வயதில் ஊராட்சி மன்ற தலைவராக வாகை சூடிய மூதாட்டி!

தொடக்கம் முதல் இறுதிவரை முன்னிலை: 72 வயதில் ஊராட்சி மன்ற தலைவராக வாகை சூடிய மூதாட்டி!

சங்கீதா

அரியலூரில் ஊராட்சி மன்ற தலைவருக்கான இடைத்தேர்தலில் 72 வயது மூதாட்டி வெற்றிபெற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் 7 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் கடந்த 09 ஆம் தேதி நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணி நடைப்பெற்றது. இதில் ரெட்டிபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு பாப்பாத்தி என்ற 72 வயது மூதாட்டியும், ராணி என்பவரும் போட்டியிட்டனர்.

முதல் சுற்று முடிவிலிருந்து இறுதிசுற்றுவரை மூதாட்டியே முன்னிலையில் இருந்து வந்தநிலையில், 1635 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட 808 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் பாப்பாத்தி என்ற மூதாட்டி. பின்னர் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை பெற்று கொண்டார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் அக்கிராம பொதுமக்கள் மூதாட்டி பாப்பாத்திக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

செய்தியாளர் - வெ.செந்தில்குமார்