கேரளாவில் அரிக்கொம்பன் என்றும்,தமிழக பகுதிகளில் அரிசிக்கொம்பன் என்றும் அழைக்கப்படும் காட்டு யானை, லோயர் கேம்ப் வழியாக தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் நுழைந்துள்ளது. காட்டு யானை ஊருக்குள் வந்ததால் வீதிகள் வெறிச்சோடின. கம்பம் நகருக்குள் யானை மிரட்சியுடன் சுற்றிவந்த நிலையில், அதனைக் கண்டு மற்றவர்கள் அஞ்சி ஓடியதாலும், மக்கள் நடமாட்டத்தாலும் அச்சம் அடைந்த அரிக்கொம்பன், நெல்லுகுத்தி புளியமரம் பகுதியில் முகாமிட்டது.
இதையடுத்து அரிக்கொம்பனை அடர்ந்த காட்டுக்குள் அனுப்பும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே பிடிபட்டபோது அரிக்கொம்பனுக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டதால் அதனைக் கொண்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.இந்நிலையில், யானை நடமாட்டம் காரணமாக, பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அரிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் முதல் முயற்சி தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து யானையை பிடிக்க வசதியாக கம்பம் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.