எம்.பி, ரவிக்குமார் முகநூல்
தமிழ்நாடு

“மது விலக்கு: பேரறிஞர் அண்ணாவின் பேசப்படாத சாதனை” - விசிக எம்.பி ரவிக்குமார்

ரவிக்குமார்

பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான அரசின் சாதனைகளாக சென்னை மாநிலம் என்பதைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ததையும், சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என ஆக்கியதையும் சுட்டிக்காட்டுவார்கள். அவற்றைப் போலவே அண்ணாவின் ஆட்சிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு- தமிழ்நாட்டில் மதுவிலக்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஆட்சியாக அது இருந்தது என்பதுதான் அந்தச் சிறப்பு.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்பதில் பேரறிஞர் அண்ணா உறுதியாக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது அண்டை மாநிலங்களிலெல்லாம் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு மதுக் கடைகள் திறக்கப்பட்டன. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின்பு ஆந்திராவிலும், கர்னாடகாவிலும் காங்கிரஸ் அரசுகளால் மதுக் கடைகள் திறக்கப்பட்டன.

மகாத்மா காந்தியடிகளின் அரசியலில் மதுவிலக்கு என்பதுதான் முதன்மையான பாத்திரத்தை வகித்தது. “திருட்டை விட, பாலியல் தொழிலை விட மது அருந்துவது மோசமானது” என்ற கருத்தைக் கொண்டிருந்த காந்தியடிகள் ( M.K.Gandhi, Prohibition at any cost, Page 10) , “மது என்பது சாத்தானின் கண்டுபிடிப்பு. குடிப்பவர்களின் பணத்தை மட்டும் மது களவாடுவதில்லை, அவருடைய அறிவையும் சேர்த்து அது பறித்துக் கொள்கிறது” என்று கடுமையாக விமர்சித்தவர் .

“சுருக்கமாகச் சொன்னால் மது ஒருவரை உடல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அழிக்கிறது” என்றார் காந்தியடிகள். “இந்தியாவின் சர்வாதிகாரியாக என்னை ஒரு மணி நேரம் நியமித்தால், இந்தியாவில் இருக்கும் அனைத்து சாராயக் கடைகளையும் எந்தவித இழப்பீடும் தராமல் உடனே மூடுவதற்கு நான் உத்தரவிடுவேன். கள் இறக்கும் மரங்களையெல்லாம் ஒழிப்பதற்கு உத்தரவிடுவேன்” என்று காந்தியடிகள் குறிப்பிட்டார் (M.K.Gandhi, Prohibition at any cost, Page 9). அப்படிப் பேசிய காந்தியடிகளால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்துக்கு வந்த சில ஆண்டுகளிலேயே மதுக்கடைகளைத் திறந்தது கதர் சட்டைக்காரர்களுக்கே அதிர்ச்சி அளிப்பதாகத் தான் இருந்தது.

காங்கிரஸ் ஆட்சி செய்த பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்பதில் அறிஞர் அண்ணா உறுதியாக இருந்தார்.

1967ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அண்ணா, மதுவிலக்கை அமல்படுத்துவதால் தமிழ்நாடு அரசுக்கு ஏற்படும் இழப்பை எடுத்துக் கூறினார்"மதுவிலக்கை அமல்படுத்துவதால் தமிழ்நாட்டு அரசுக்கு ரூபாய் 30 கோடி இழப்பு ஏற்படுகிறது. சென்னையில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் போது பெங்களூரிலும், புதுச்சேரியிலும் அது கிடையாது. குடிப்பவர்கள் அங்கு செல்வது கடினமல்ல" என அவர் கூறினார் (Annavinpadaippugal.info, 06.04.1967,பிரச்சினைகள் பல) . இந்தியா முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது. எவ்வளவு நிதி இழப்பு ஏற்பட்டாலும் மதுக்கடைகளைத் திறப்பதில்லை என்பதில் அண்ணா உறுதியாக இருந்தார்.

1967-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் நாள் அனைத்திந்திய கைத்தறி வார விழாவில் உரையாற்றும் போது அண்ணா பின்வருமாறு குறிப்பிட்டார்: "ஒட்டுமொத்த இந்தியாவிலேயே மதுவிலக்கை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் பெருமை தமிழ்நாட்டுக்கு மட்டும் தான். ஆந்திராவில் மதுக்கடைகள் விரைவில் திறக்கப்படும் என்ற செய்தியை இன்று காலை நாளேடுகளில் பார்த்தேன்.

அதற்கு முன்பு கேரளாவிலும் மதுவிலக்கு தளர்த்தப்படும் என்ற செய்தி வந்தது. அந்தச் செய்தி வருவதற்கு முன்பாகவே பம்பாயில் பீர் கடைகள் திறக்கப்படும் என்ற செய்தி வெளியானது. பீகார் மாநிலத்தின் சில பகுதிகளில் மதுவிலக்கு முற்றாக ரத்து செய்யப்படுகிறது என்ற செய்தியும் வெளியானது. இந்தச் செய்திகளையெல்லாம் படிக்கும் தமிழ்நாட்டு மக்கள் அண்டை மாநிலங்களின் உதாரணத்தைப் பின்பற்றி இங்கேயும் மதுவிலக்கு ரத்து செய்யப்படுமா என்ற மனத்தூண்டலுக்கு ஆளாக மாட்டார்களா? இதுவரை காலமும் மது அருந்தாமல் இருந்தவர்களுக்கு அந்த ஆசையை இது தூண்டாதா? விசைத்தறியை அறிமுகப்படுத்துவதும் மதுவிலக்கை ரத்து செய்வதும் ஒன்றிய அரசின் அநீதி அல்லவா? “ என்று அண்ணா கேட்டார்.

“ மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று கோடி மக்களிடையே நற்பண்புகளை வளர்ப்பதற்கும் மதுவிலக்குத் தேவை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என உறுதிபடத் தெரிவித்தார்.

“ அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு ரத்து செய்யப்படும்போது தமிழ்நாட்டில் அதை எவ்வாறு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும்? இந்தச் சூழ்நிலையில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒற்றுமை என்று பேசுவது வெறும் மேடைப்பேச்சாகவே இருக்கும் அறிவார்ந்த ஒன்றாக இருக்காது." என்று அண்ணா சாடினார்.

" மதுவிலக்கு என்பது நமது அரசமைப்புச் சட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மதுவிலக்கைத் தளர்த்தி ஒன்றிய அரசு அநீதிக்குத் துணை போகிறது. இந்தப் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்" என அண்ணா தனது உரையில் எச்சரித்தார் ( A.K.Moorthy, G.Sankaran (Ed) Occasional Speeches of Anna, 1975, Page 57-58).

முதலமைச்சராகப் பொறுப்பேற்றுப் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணா, அங்கேயும் மதுவினால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன என்பதை உற்றுக் கவனித்தார் . சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய அண்ணாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உரையாற்றிய அண்ணா அவர்கள், அந்த நாடுகளில் வாழும் மக்களது பண்பாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களின் பண்பாட்டுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைத் தனது உரையில் விவரித்தார்.

அமெரிக்காவைப் பற்றிப் பேசும்போது " அமெரிக்க மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாகத் தங்களுடைய கடுமையான உழைப்பின் மூலம் நாட்டின் உற்பத்தியைப் பெருக்குவதில் கவனமாக இருக்கிறார்கள். மாலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை பல்வேறு கேளிக்கைகளில் அவர்கள் தங்களின் மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் அதிகமாகக் குடிப்பதில்லை. அங்கே மது அருந்துகிறவர்களை நான் பார்த்தேன் இங்கேயும் பார்த்திருக்கிறேன்.

அங்கே அவர்கள் மதுவைக் குடிக்கிறார்கள் இங்கேயோ மது குடிகாரர்களைக் குடிக்கிறது. இரவு விருந்துகளில் உலக நடப்புகளை விவாதித்தபடி ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அவர்கள் செலவிடுகிறார்கள். அப்போது கால் கிளாஸ் மதுவைக்கூட அவர்கள் குடித்து முடிப்பதில்லை. அவ்வப்போது மதுவில் தங்களுடைய உதடுகளை நனைத்துக் கொள்கிறார்கள். உற்சாகம் வர வேண்டும் என்பதற்காக அவர்கள் மது அருந்துகிறார்கள். ஆனால் நம் மக்களிடம் இருக்கும் பழக்கமோ வேறுபட்டது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நாம் குடிக்கிறோம், அதனால் அறிவை இழக்கிறோம்.” என்று தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு அண்ணா பேசினார்.

“ நான் பங்கேற்ற விருந்துகளின் போது நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எனக்கு பழச்சாறு வழங்கப்பட்டது. பழச்சாறு கொடுக்கப்பட்டதும் நான் உடனே முழுதையும் குடித்து விடுவேன். மீண்டும் மீண்டும் அவர்கள் எனக்குப் பழச்சாறு கொண்டுவந்து கொடுப்பார்கள். ‘ பழச்சாறு தந்தால் அதை உடனே காலி செய்துவிடக்கூடாது’ என்று எனது நண்பர் ஆற்காடு ராஜேஷ் என்னிடம் தெரிவித்தார். அதற்குப் பிறகுதான் நான் அமெரிக்கர்களின் பழக்கத்தைக் கற்றுக் கொண்டேன். அங்கிருந்து திரும்பும் போது மதுவிலக்கைத் தளர்த்தவே கூடாது என்ற என்னுடைய முடிவு மேலும் உறுதிப்பட்டது." என்று அண்ணா தெரிவித்தார் (A.K.Moorthy, G.Sankaran (Ed) Occasional Speeches of Anna, 1975, Page 184-185).

1967 தேர்தலின் போது ‘ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவோம்’ என்று வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தின் பொருளாதார நிலை ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் ‘மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம்’ என்று ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை அவர் செயல்படுத்தினார். 5 கோடி ரூபாய் செலவில் 31 லட்சம் குடும்பங்களுக்கு அந்தத் திட்டம் பயன் கொடுத்தது. ஒன்றிய அரசிடம் உதவி கேட்ட போது கோதுமை வாங்கிக் கொண்டால் 10 கோடி ரூபாய் இனாமாகத் தரப்படும் என்று அது சொன்னது.

நிதி உதவிக்கான அண்ணாவின் கோரிக்கையை நிராகரித்த ஒன்றிய காங்கிரஸ் அரசு புதிதாக வரிகளை விதித்துக் கொள்ளுமாறு ஆலோசனை தந்தது. அதை ஏற்றுக் கொள்ளாத அண்ணா நாங்கள் புதிய வரிகளை விதிப்பதை விட ஒன்றிய அரசு ராணுவத்துக்குச் செய்யும் செலவுகளைக் குறைத்துக் கொண்டு இது போன்ற நலத்திட்டங்களுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார். மாநில அரசிடம் நிதி இல்லாததால் ஒரு படி அரிசித் திட்டத்தைக்கூட அண்ணாவின் அரசால் தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. ( R.Kannan, DMK Years- Ascent Descent Survival, 2024, Page 119-125)

அவ்வளவு நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் பேரறிஞர் அண்ணா தான் உயிரோடு இருந்தவரைத் தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறக்கவேயில்லை. பேரறிஞர் அண்ணாவின் பேசப்படாத சாதனைகளில் அதுவும் ஒன்று.