தமிழ்நாடு

பெட்ரோல் விலை: சட்டப்பேரவையில் காரசார விவாதம்

பெட்ரோல் விலை: சட்டப்பேரவையில் காரசார விவாதம்

PT WEB

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் மீண்டும் காரசார விவாதம் நடைபெற்றது.

நேற்றைய நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைப்பதாக கூறியதாகவும், ஆனால் பெட்ரோலுக்கு மட்டும் வெறும் 3 ரூபாய் குறைத்துள்ளது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கடந்த 2011 முதல் பத்து ஆண்டுகளில் 5 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவிட்டு, ஒரு முறைகூட குறைக்காதவர்கள், பெட்ரோல் விலை குறைப்பு குறித்து பேசலாமா என்று கூறி சில கருத்துக்களை தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் அவதூறாக பேசி இருப்பதாக கூறினார். மீண்டும் பேசிய நிதியமைச்சர், தான் தனி நபர் குறித்து பேசவில்லை என்றும் எந்த கட்சி 5 முறை விலையேற்றியதோ, அவர்கள் எங்களைப் பார்த்து குறைக்கவில்லை என்று கூறுவது சரி இல்லை என்றும், யாரையும் அவமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து பேசிய முதலமைச்சர், அமைச்சர் கூறிய வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரினார். அதை தொடர்ந்து அமைச்சர் பேசிய வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.