தாசில்தாரிடம் வாக்குவாதம் புதியதலைமுறை
தமிழ்நாடு

"Hospital-க்கு கூட பணம் எடுத்துட்டு போகக்கூடாதா? என்ன சார் அநியாயம் இது" - கடும் வாக்குவாதம் #Video

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மருத்துவச் செலவுக்காக கொண்டுசெல்லப்பட்ட 47 ஆயிரம் ரூபாய் பணம், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பணத்தைக் கொண்டுசென்றவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

யுவபுருஷ்

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சோதனைகளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணம் இன்றி பணம் கொண்டு செல்பவர்களிடம் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர் அதிகாரிகள். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கோம்புபள்ளம் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அதில் இருந்தவர்களிடம் 47 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. இதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, பணம் கொண்டு வந்திருந்த நபர்கள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பணம் கொண்டு செல்வதாக கூறியும், பணத்தை திருப்பி தராததால் அங்கு வந்த சத்தியமங்கலம் தாசில்தார் மாரிமுத்துவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“உரிய ஆவணம் இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு சென்றால் மட்டுமே பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவ செலவிற்கு கொண்டு செல்லும் 47 ஆயிரம் பணத்தை ஏன் பறிமுதல் செய்கிறீர்கள்?” என வாக்குவாதம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, தேர்தல் பறக்கும்படையினர் உடனடியாக அவர்களிடம் திருப்பிக்கொடுத்தனர். தற்போது, இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.