தமிழ்நாடு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் – வடியாத மழைநீர்: விபரங்கள்

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் – வடியாத மழைநீர்: விபரங்கள்

Veeramani

சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கனமழையால் வீதிகளிலும், வீடுகளுக்குள்ளேயும் பெருக்கெடுக்கும் தண்ணீரால் பொதுமக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விபரங்கள்…

திருவொற்றியூர், ஆர்.கே.நகர்: சென்னையில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர் பகுதிகளில் கனமழையால் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. திருவொற்றியூரில் கலைஞர் நகர், ராஜாஜி நகர், அண்ணாமலை நகர், ராஜா சண்முகம் சாலை என முக்கியப் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர், வீடுகளுக்குள்ளும் புகுந்தது. மழைநீருடன் பாம்புகள், பூச்சிகளும் வீட்டுக்குள் நுழைவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மணலி விரைவுச்சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

பேசின் பிரிட்ஜ்: சென்னையில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலைய தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், வெளியூர்களிலிருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் அம்பத்தூர் மற்றும் ஆவடி ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் அங்கிருந்து பேருந்துகளிலும் ஆட்டோக்களிலும் வீடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

ஆவடி: ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் ஆவடி மாநகராட்சி அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதிய ராணுவ சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேற்கு மாம்பலம்: மேற்கு மாம்பலம் பகுதியில் வெள்ளநீர் வெளியேற வழியில்லாததால் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. வெள்ளம் வடியாததோடு மின் வினியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் இருளில் தவித்தனர், உணவு சமைக்கவும் வழியில்லாமல் போனதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

புறநகர்ப் பகுதிகள்: சென்னையின் புறநகர்ப் பகுதிகளான பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்துப் போயினர்.

இந்த நிலையில், சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கிய 107 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 86 இடங்களில் தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார்கள் மூலம் அகற்றியுள்ளதாகவும், 11 இடங்களில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பேர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாவட்டங்களில் இருந்து 300 தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரை சென்னைக்கு வர உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.