தமிழ்நாடு

தாய்லாந்தில் சிக்கிய அறந்தாங்கி இளைஞர்.. மகனுக்காக போராடும் தந்தைக்கு இப்படியொரு துயரமா?!

தாய்லாந்தில் சிக்கிய அறந்தாங்கி இளைஞர்.. மகனுக்காக போராடும் தந்தைக்கு இப்படியொரு துயரமா?!

webteam

90 ஆயிரம் சம்பளத்தில், டேட்டா என்ட்ரி வேலை வாங்கி தருவதாக கூறிய ஏஜண்ட் மூலம் தாய்லாந்து சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர், அங்கு மோசடிக்கு உள்ளாக்கப்பட்டு தற்போது தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செய்யானம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். எம்.பி.ஏ பட்டதாரியான இவர் இவரது மகனின் உடல்நல குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்த நிலையில் ஏற்கனவே சிவகாசியில் 30 ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்த்து வந்த தொகை போதாது என்று வெளிநாடு செல்ல முடிவு செய்தார்.

காரைக்குடியைச் சேர்ந்த ஏஜென்ட் பாலா என்பவர் துபாய் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் மூலமாக கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி வேலைக்கு மாதம் 90 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்ற தகவலைத் தொடர்ந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பாலாவிடம் கட்டி துபாய் அழைத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.

கடந்த மே மாதம் 31ஆம் தேதி அழைத்து செல்லப்பட்ட செல்வகுமார் தாய்லாந்தில் இருந்து படகு மூலமாக ரகசியமான ஒரு தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவரிடம் கம்ப்யூட்டர் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. தான் செய்வது தவறான வேலை என்று உணர்ந்த செல்வகுமார், தான் செய்யும் வேலை குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் அவருக்கு  துன்புறுத்தல்கள் அதிகமாக இருந்திருக்கின்றது. ஒரு கட்டத்தில் மைதானத்தை பலமுறை சுற்றி ஓட வேண்டும் என்ற தண்டனையும் கரண்ட் ஷாக் கொடுத்தும் அவரை துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து செல்வக்குமார் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்று நிறுவனத்திடம் வலியுறுத்தி கேட்ட நிலையில் ஒருநாள் இரவிற்குள் 3 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் போட்டு விட வேண்டும் என்றும் அவ்வாறு கொடுத்தால் இந்தியா செல்ல அனுமதிப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்ததை தொடர்ந்து வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் வீட்டிற்கு தகவல் தெரிவித்திருக்கின்றார் செல்வக்குமார்.

திடீரென அரை மணி நேரத்தில் 3,58,000 ரூபாயை செல்வகுமார் அனுப்பி இருக்கின்ற வங்கி கணக்கில் போட வேண்டும் என்று அவரது மனைவி ரம்யாவுக்கு தகவல் தெரிவிக்க பதறிய குடும்பத்தினர் செய்வதறியாது செல்வகுமாரை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாலிச் செயின் உள்ளிட்ட நகைகளை விற்றும் கடன் வாங்கியும் இரவோடு இரவாக மூன்று லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை செல்வகுமார் அனுப்பி இருந்த வங்கி கணக்கில் போட்டு இருக்கின்றனர்.

பணத்தை பெற்றுக் கொண்ட நிறுவனம் மறுதினமே செல்வகுமாரை போன்று அவருடன் இருந்த 7 கேரளத்தை சேர்ந்தவர்களிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு எட்டு பேரையும் இரண்டு துப்பாக்கி ஏந்திய நபர்களோடு 500 கிலோமீட்டர் தொலைவில் பாங்காக் என்ற இடத்தில் இறக்கி விட்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே செல்வகுமாரின் குடும்பத்தினர் செல்வகுமாரை அனுப்பிய ஏஜென்ட் பாலாவிடம் தொடர்ந்து தொலைபேசியில் பேசிய போதும் செல்வகுமார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஏஜெண்டிடம் ஏதேனும் தொந்தரவு செய்தால் உன்னை உயிரோடு விடமாட்டோம் என்றும் மிரட்டி இருப்பதாகவும் தெரிகிறது ஆகவே இங்கிருக்கின்ற ஏஜென்ட்க்கும் அங்கிருக்கின்ற நிறுவனத்திற்கும் இந்த தவறில் தொடர்பிருக்கிறது என்பதும் தெரிகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பாங்காக்கில் போலீசாரிடம் சரண்டர் ஆன நிலையில் செல்வகுமார் உள்ளிட்ட 7 கேரளத்தைச் சேர்ந்த நபர்களை அங்கு இருக்கின்ற ஒரு செக்டரில் அடைத்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கான உணவு வழங்கி வந்தாலும் அவர்களை வெளியே செல்ல அனுமதிக்காமல் தொலைபேசியில் பேசுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு பிறகு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அடிக்கடி பேச முடியவில்லை என்றாலும் எப்போதாவது செல்வகுமார் தொலைபேசியில் குடும்பத்தினரிடம் தொடர்பு கொள்ளும் பொழுது,  எங்கு இருக்கின்றோம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றோம் என்று தெரியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார். செக்டரில் இருக்கும் செல்வகுமார் அங்கிருந்து இந்திய எம்பஸியையும் தொடர்பு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது விரைவில் தாயகம் அனுப்பி வைப்பதாகவும் இந்திய எம்பஸி தெரிவித்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் ஏற்கனவே 68 நபர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் பெயர் விபர பட்டியலில் செல்வகுமார் பெயரும் இருந்திருக்கின்றது. இந்நிலையில் இன்று தாய்லாந்தில் இருந்து அதே கம்பெனியில் இருந்து பணிபுரிந்த நபர்கள் இந்தியா திரும்புகின்ற நிலையில் செல்வகுமார் திரும்பாதது குடும்பத்தினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உண்மையிலேயே செல்வக்குமார் தாய்லாந்து அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றாரா அல்லது செல்வக்குமார் கம்பெனியை பற்றி வெளியில் தகவல் தெரிவித்ததால் செல்வகுமாரை கம்பெனி நிர்வாகமே மறைத்து வைத்திருக்கிறதா என்ற சந்தேகம் அவரது மனைவி ரம்யா உள்ளிட்ட குடும்பத்தினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்நிலையில் இன்று செல்வகுமார் தாய்லாந்தில் இருந்து வீடியோ மூலமாக முதல்வருக்கு குறுந்தகவல் அனுப்பி இருக்கின்றார். புதிய தலைமுறை மூலமாக இத்தகவலை முதல்வர் பார்த்து உதவி செய்ய வேண்டும் என்றும் நம்மிடையே வீடியோ பதிவை அனுப்பி இருக்கின்றார்.

மகனுடைய மருத்துவ செலவிற்காக கடனை பெற்று வெளிநாடு சென்ற செல்வகுமார் அங்கு ஏமாற்றப்பட்டு மேலும் அனைத்து நகைகளையும் விற்று கடனை வாங்கி தாயகம் திரும்பிவிடலாம் என்று முயற்சி செய்தும் பலன் இல்லாமல் எந்த சூழ்நிலையில் இருக்கின்றோம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றோம் என்று கூட தெரியாமல் தினம் தினம் வேதனையோடு ஊர் திரும்பும் கனவோடும் காத்துக் கொண்டிருக்கின்றார். படித்தவர்களை நல்ல சம்பளம் வாங்கித்தருகின்றோம் என்று வெளிநாடு அனுப்பி வைத்து ஏமாற்றி பிழைக்கும் ஏஜெண்டுகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையாக உள்ளது.  

த. குமரேசன்