ஆன்லைன் ரம்மி file image
தமிழ்நாடு

அரக்கோணம்: ஆன்லைன் ரம்மியால் மீண்டும் பறிபோன இளைஞரின் உயிர்! தொடரும் சோகத்திற்கு ஒரு முடிவில்லையா?

ஆன்லைன் ரம்மியால் அரக்கோணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களினால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரக்கோணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரமேஸ்வரமங்கலத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். பட்டதாரியான இவர், தன் தாயாருடன் இணைந்து ஹோட்டல் தொழிலை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், விஜயகுமார் ஆன்லைன் ரம்மி மீது மோகம் கொண்டு அதில் விளையாடிய வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காகப் பலரிடமும் அவர் சுமார் 7 லட்சம் ரூபாய் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடன் கொடுத்தவர்கள் அவரிடம் திருப்பிக் கேட்டுள்ளனர். இதில் மனமுடைந்த அவர், தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை

ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தைப் பறிகொடுத்த பலர் தற்கொலை செய்துகொண்டதால், தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.