தமிழ்நாடு

அரக்கோணம்: சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு

webteam

அரக்கோணம் அருகே சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த எஸ்ஆர் கண்டிகை பேருந்து நிறுத்தத்தின் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (43), கன்னியப்பன் (60) மற்றும் உண்ணாமலை குமாரி (55) என்ற பெண் உட்பட மூன்று பேர் மீது சோளிங்கரிலிருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற கார் மோதிய விபத்தில் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த மூன்று பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிதி மற்றும் சாலையில் வேகத்தடை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அரக்கோணம் சோளிங்கர் சாலையில் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டிஎஸ்பி பிரபு அரக்கோணம் வட்டாட்சியர் பழனி ராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணி மற்றும் உரிய இழப்பீடு பெற்று தருவதாக தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக அரக்கோணம் சோளிங்கர் நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக பல கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.