தமிழ்நாடு

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம்

Veeramani

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக கண்டனம் தெரிவித்திருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், “ கோயில்களில் ஆகமவிதிப்படி பூஜை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. கோயில் நடைமுறைகளை மாற்றக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் 1970-ல் சட்டம் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அதேபோல இந்துவாக பிறந்து தகுந்த பயிற்சி முடித்த யாரும் அர்ச்சகராகலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஊர்களில் உள்ள முக்கிய கோவில்களில் ஆறு பாடசாலைகள் அமைக்கப்பட்டு அனைத்து சமூகப் பிரிவினரையும் கொண்ட 240 மாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் தமிழ் முறைப்படி அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் 240 பேர் ஒன்றரை வருட பயிற்சியை முடித்தனர். இவர்களில் 207 பேர் தேர்ச்சி பெற்றனர். ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் 202 பேர் பணிக்காக காத்திருந்தனர். இதில் 2 பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டு, 200 பேர் காத்திருப்பு பட்டியலில் இருந்தனர்.

நடந்துமுடிந்த தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழகத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான 47 கோயில்களில் ’அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்ற பெயரில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அமைச்சர் சேகர் பாபுவால் தொடக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆக்ஸ்ட் 14ஆம் தேதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். பயிற்சி பள்ளியில் படித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 பேருக்கு இந்த பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்கள் வெவ்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணி நியமன ஆணையைப் பெற்ற அர்ச்சகர்கள் பலரும் இதற்கு நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.