தமிழ்நாடு

பணிமாற்றத்திற்கு எதிராக ஆட்சியர் நடராஜன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

பணிமாற்றத்திற்கு எதிராக ஆட்சியர் நடராஜன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

webteam

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த நடராஜன் தனது விளக்கத்தை கேட்காமல் பணிமாற்றம் செய்யப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் உள்ளிட்டோர் நுழைந்தது தொடர்பாக சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் சிபிஎம்  வேட்பாளர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கு விசாரணையில், தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க முடிந்த தேர்தல் ஆணையத்திற்கு, மாவட்ட ஆட்சியர் மீதோ அல்லது அவரது உதவியாளர் மீதோ நடவடிக்கை எடுக்க முடியாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எல்லா அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள் எனவும் ஆணையம் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கும்போது அதிகாரம் இல்லை என எப்படி கூறுவீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர். 

இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், உதவி தேர்தல் அதிகாரியையும் மாற்றம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதைத்தொடர்ந்து புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஆவணங்கள் தாக்கல் செய்தது. அதில், மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ்.நாகராஜன், உதவி அலுவலராக சாந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இது குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த நடராஜன் தனது விளக்கத்தை கேட்காமல் பணிமாற்றம் செய்யப்பட்டதாகவும் நடந்த சம்பவங்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் பணிமாற்றத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 

இதையடுத்து உங்களை பணிமாற்றம் செய்யவேண்டும் என நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் பணிமாற்றத்தை நிறுத்தி வைக்க முடியாது எனவும் கூறி வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.