2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சிபிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முதல்கட்டமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை நீதிமன்றம் சரியான முறையில் பார்க்கவில்லை என தோன்றுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக சிபிஐ தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் சைனி இத்தீர்ப்பை வழங்கினார். ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தரப்பு தவறி விட்டதாகவும் எனவே இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி சைனி ஒரே வரியில் தீர்ப்பை அளித்தார். ராசா, கனிமொழி தவிர கலைஞர் டிவி முன்னாள் நிர்வாகி சரத்குமார், ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பல்வா உள்ளிட்ட 17 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.