தமிழ்நாடு

சபாநாயகராகிறார் அப்பாவு; துணை சபாநாயகராகிறார் கு.பிச்சாண்டி

சபாநாயகராகிறார் அப்பாவு; துணை சபாநாயகராகிறார் கு.பிச்சாண்டி

Sinekadhara

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு தேர்வு செய்யப்படுகிறார்.

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையில் யார் சபாநாயகராகத் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துவந்த நிலையில் தற்போது ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு தேர்வு செய்யப்படுகிறார்.

1989லிருந்தே எம்.எல்.ஏவாக உள்ள அப்பாவு தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளில் நீண்ட அனுபவம் கொண்டவர். தென் மாவட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் திமுக சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த ஆவுடையப்பன் இந்தமுறை போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். மூத்த தலைவரான அப்பாவு 1996லிருந்து 3 முறை தொடர்ச்சியாக எம்.எல்.ஏவாக இருந்தவர் என்பதால் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டி. இவர் தற்போது 6வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இருவரும் நாளை மறுநாள் மனுதாக்கல் செய்யவுள்ளனர். மேலும் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்ற அவையை கூட்டுவது, வழிநடத்துவது, எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு அளிப்பது மற்றும் நடவடிக்கை எடுப்பது போன்ற முக்கிய பணிகள் சபாநாயகர் வசம் உள்ளது. சபாநாயகர் ஒரு நீதிபதிக்கு ஒப்பானவராக கருதப்படுகிறார். சபாநாயகர் வரமுடியாத காலகட்டத்தில் துணை சபாநாயகர் அவையை வழிநடத்துவார்.