தமிழ்நாடு

“ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க மருத்துவக்குழு தேவை” - அப்போலோ

“ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க மருத்துவக்குழு தேவை” - அப்போலோ

webteam

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களை விசாரிக்க 21 சிறப்பு மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்படும்வரை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவதை ஒத்திவைக்கவேண்டும் என அப்போலோ மருத்துவமனை சார்பில் மனு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது குற்றம்சாட்டியிருந்தார். அப்போலோ மருத்துவமனையுடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டு அமைத்து செயல்படுவதாகவும், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் தவறான தகவல்களை தந்ததாகவும் அவர் குற்றம்சாட்டி அவர்களையும் விசாரணையில் வாதிகளாக சேர்க்கவேண்டும் என ஆணையத்தை வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி மற்றும் அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த 11 மருத்துவர்கள் அறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. 

இதில் பெருமாள்சாமி மட்டும் ஆஜரான நிலையில் அப்போலோ மருத்துவமனை சார்பில் அதன் வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா ஒரு புதிய மனு தாக்கல் செய்தார். அதில் மருத்துவர்களை விசாரிக்க தகுதி வாய்ந்த மருத்துவக் குழு அமைக்கப்படவேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்களின் வாக்குமூலங்கள் தவறாக பதிவு செய்யப்பட்டும் தவறாக புரிந்துகொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதாவிற்கு 21 தனிச்சிறப்பு துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக சுட்டிக்காட்டியுள்ள அப்போலோ மருத்துவமனை 21 சிறப்பு மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்படவேண்டும் என்றும், மருத்துவர்களின் வாக்குப்பதிவு முழுவதும் ஆடியோ, வீடியோ பதிவு செய்யப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.