apartment pt web
தமிழ்நாடு

”கடிக்குதுனு தெரிஞ்சும் புடிச்சிட்டு போகவிட மாட்றாங்க..”- நாய் தொல்லையால் குடியிருப்புவாசிகள் அவதி!

“குரங்கு வந்தா தொரத்துறாங்க... நாயை மட்டும் விடமாட்டேன் என்கிறார்கள்”- தனியார் குடியிருப்பில் முடிவுக்கு வருமா நாய்களின் பிரச்சனை?

Angeshwar G

ரேபிஸால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமல்ல அதன் உமிழ்நீர் பட்டால் கூட ஆபத்து என்பதும் அதற்கு உயிரையும் பறிக்கும் ஆற்றல் உண்டு என்பதும் யாரும் அறியாததல்ல. அப்படி ரேபிஸால் பாதிக்கப்பட்ட நாயால் மனிதர்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக அதற்கான ஊசியை போட்டுக்கொள்வது நல்லது. அப்படியில்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

குடியிருப்பு வளாகத்திற்குள் ராபிஸ் பாதித்த நாய்

இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன் போரூர் அய்யப்பந்தாங்கல் பகுதியில் உள்ள ப்ரஸ்டீஜ் பெல்லா விஸ்தா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமானதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்களை நாய்கள் கடிக்கத் தொடங்கியதாகவும் தகவல்கள் கிடைத்தன. இரு தினங்களில் மட்டும் சிறுவன் உள்ளிட்ட ஆறு பேரை தெரு நாய்கள் கடித்தது. ஆறு பேரில் இரண்டு பேரை கடித்த நாய் ஒன்று இறந்து போன நிலையில் அதனை சோதனையிட்டதில் அந்த நாய்க்கு ராபிஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டதால், கடிபட்டவர்கள் மட்டுமின்றி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக அச்சத்திற்கு உள்ளானார்கள்.

Gated community என்றாலும் நாய்தொல்லை

இந்நிலையில், கடந்த 22 ஆகஸ்ட் அன்று அங்கு வசிக்கும் குடியிருப்புவாசியை தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், “போரூர் அய்யப்பந்தாங்கல் பகுதியில் உள்ள ப்ரஸ்டீஜ் பெல்லா விஸ்தா அடுக்குமாடி குடியிருப்பில் கிட்டத்தட்ட 2650 வீடுகள் உள்ளன. 1BHK முதல் 4BHK வரை வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் வாகனங்கள் வந்து செல்ல இரு பாதைகள் உள்ளன. இது ஒரு gated community. இதற்கான பராமரிப்புச் செலவுகள் அனைத்திற்கும் நாங்கள் பணம் செலுத்துகிறோம். ஆனால் வெளி நாய்களை உள்ளே அனுமதித்து விட்டார்கள். இப்போது நாய்களை வெளியில் அனுப்பக்கூடாது என சொல்கிறார்கள். இப்போது அவை உள்ளுக்குள்ளேயே சுற்றுகின்றன.

குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் அனைவரும் வாக்கிங் செல்கிறார்கள். பலரும் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். ஒருவரை கடித்த நாய் பிடிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. திடீரென அது இறந்த நிலையில், பிரேத பரிசோதனையில் அதற்கு ரேபிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. மீதமுள்ள நாய்களுக்கும் ரேபிஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளது.

"10 மணிக்கு மேல் வெளியில் செல்லாதீர்கள்"

இது குறித்து புகார் அளித்தால், நாய்களுக்கு ரேபிஸ் ஊசி வேண்டுமானால் போடுவோம். அதை இடமாற்றம் செய்ய முடியாது என்கிறார்கள். குழந்தைகள் விளையாடும் பூங்காவில் அத்தனை நாய்கள் உள்ளன. குடியிருப்பு வாசிகளுக்கான வாட்ஸாப் குருப்பில், 10 மணிக்கு மேல் யாரும் வெளியில் செல்லாதீர்கள் என மெசேஜ் வருகிறது. இத்தனை குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் 10 மணிக்கு மேல் வெளியே செல்லாதீர்கள் என்று எப்படி சொல்கிறார்கள் என்பதே தெரியவில்லை. gated community பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு கூட பூங்காக்களில் அனுமதி இல்லை. ஆனால், நாங்கள் வசிக்கும் குடியிருப்பில் தெருநாய்கள் சுதந்திரமாக திரிகின்றன.

நாய்களுக்கான உணவுகளையும் இங்கிருக்கும் சிலர் அளிக்கின்றனர். அவர்களிடம் இது குறித்து கேட்டால், நாங்கள் உணவளிப்பதை நீங்கள் தடுக்க முடியாது என்கின்றனர். 9 வயது குழந்தையைக் கூட நாய் கடித்துள்ளது. அனைத்து தரப்பு வயதினரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

அன்றே அடுக்குமாடி குடியிருப்பின் செகரெட்டரி கௌரி சங்கரை தொடர்பு கொண்டோம். தான் வெளியில் இருப்பதாகவும் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் சிவசங்கரி என்பவரது தொடர்பு எண்ணைக் கொடுத்து அவரிடம் இது குறித்து கேட்கச் சொன்னார். கவுன்சிலர் சிவசங்கரியைத் தொடர்பு கொண்டபோது, ப்ளூகிராஸில் இருந்து ஆட்கள் வந்திருப்பதாகவும் முதல் கட்டமாக 10 நாய்கள் வரை ஊசிகளை செலுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ப்ளூ கிராஸ் சார்பில் இருந்து வளாகத்திற்கு வந்து நேரடியாக அனைத்து தெரு நாய்களுக்கும் தடுப்பூசி போட முற்பட்டனர்.

எனினும், 8 நாய்களுக்கு மட்டுமே ஊசி போட முடிந்தது. எஞ்சிய நாய்கள் குடியிருப்பு வளாகத்தின் பார்க்கிங்கில் பதுங்கி விட்டது. வளாகத்தில் உள்ள நாய்களுக்கு ராபிஸ் தொற்று பரவி இருக்க கூடும் என அச்சம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு நாய் பிடி வாகனங்கள் மூலம்வந்த ஐந்து நாய் பிடி குழுவினர்கள் தெருநாய்களை பிடித்து ராபிஸ் தொற்று இருக்கிறதா என சோதனை செய்து மீண்டும் கொண்டு வந்து விடும் நோக்கில் நாய்களை பிடிக்க ஆரம்பித்தனர். எனினும் மூன்று நாய்களை மட்டும் பிடிக்க முடிந்தது. நாய் பிடிப்பதற்கு ஒரு தரப்பினரிடையே எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அதுவும் தோல்வியில் முடிவுற்றது. சுற்றித்திரியும் ஏறத்தாழ 40 நாய்களையும் பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையோரின் நோக்கமாக இருந்தது.

குரங்குகளுக்கு 'NO' நாய்களுக்கு 'YES'

இந்நிலையில் இன்று மீண்டும் குடியிருப்புவாசிகளைத் தொடர்பு கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டோம் அவர் கூறுகையில், “இன்று மீண்டும் பஞ்சாயத்தில் இருந்து வந்தார்கள். முதல் நாளில் 3 நாய்கள் மட்டும் பிடிக்கப்பட்ட நிலையில், இன்று 9 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்தில் இருந்தே ஆட்கள் வந்ததால் நாய்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனால் மீண்டும் கொண்டு வந்து விட்டுவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.

நேற்று மீட்டிங் நடந்தது. அப்போது நாய்களை அப்புறப்படுத்தக்கூடாது என்று சொல்பவர்களிடம் நீங்களே ஆளுக்கொன்று என எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் அதற்கும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். நாய்களை கூண்டுகளில் அடைக்கலாம் என்றாலும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குரங்குகள் அடிக்கடி இங்கு வரும். ஆனால், குரங்குகளை விரட்டச் சொல்கிறார்கள். நாய்களை அப்புறப்படுத்தக் கூடாது என்கிறார்கள்” என்றார்.