சென்னையைப் போல பெரம்பலூரிலும் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிமென்ட் பூச்சுகள் உதிர்வதால் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர்.
பெரம்பலூர் கவுள்பாளையம் அருகே தமிழ்நாடு குடிசைபகுதி மாற்றுவாரியம் சார்பில் சார்பில் 21 பிளாக்குகளாக வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஒரு ஃபிளாக்கிற்கு 24 வீடுகள் என மொத்தம் 504 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. வீடில்லா ஏழைகளுக்கு வழங்குவதற்காக கட்டப்பட்ட இந்த வீடுகளுக்கு பயனாளிகள் ஒவ்வொருவரிடமும் தலா 1.64 லட்சம் ரூபாய் 3 தவணையாக பெற்றுக்கொண்டு வீடுகளை ஒதுக்கியுள்ளனர்.
இதுவரை 120 குடும்பங்கள் இந்த வீடுகளில் குடியேறியுள்ளனர். அடுத்தடுத்த மாதங்களில் மற்ற வீடுகளிலும் பயனாளிகள் குடியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த நிலையில் இந்த வீடுகள் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். சுவரின் பூச்சுகள் கையை வைத்தாலே கையோடு வந்துவிடுவதாகவும், தேய்த்தால் புட்டுபோல் உதிர்வதாகவும் புகார் எழுந்துள்ளது. மழை பெய்தால் சிமென்ட் பூச்சு கரைவதாகவும் மேல்தளசுவற்றில் நீண்ட விரிசல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த வீடுகளில் குடியேறியவர்கள் கூடுதலாக சுமார் 1.5 லட்ச ரூபாய்க்கு மேல் மராமத்திற்கு செலவு செய்ததாக கூறுகின்றனர். கட்டிடம் , பூச்சு ஆகியவை தரமற்றதாக இருப்பதால் தாங்கள் உயிர்பயத்துடன் வாழ்ந்துவருவதாக அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் அருகே கல்குவாரியில் வெடிவைக்கும் போது வீடு அதிர்வதாகவும் குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.எனவே தரமற்ற வீடுகளை கட்டிக்கொடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் தங்களுக்கு உரிய நியாயம் வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.