தமிழ்நாடு

20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதியப் பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு ஆணை

20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதியப் பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு ஆணை

webteam

சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள இதர 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டின் 20 மாநகராட்சிகளில் 3,417 காலி பணியிடங்கள் விரைவில் செய்தித்தாள்கள் மூலம் அறிவிக்கப்பட்டு, தேர்வு வைத்து நிரப்பப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகைக்கேற்ப புதியப் பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை முறைப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணியாளர் (Personnel Wing), வருவாய் மற்றும் கணக்குப் பிரிவு (Revenue & Accounts Wing), பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கல் (Engineering & Water Supply Wing), பொது சுகாதாரப் பிரிவாக (Public Health Wing) இயங்கி வரும் நிலையில் பணியிடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள தாம்பரம், கடலூர், காஞ்சிபுரம், ஒசூர், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் போதுமான பணியிடங்கள் இல்லை என புகார் வந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேவையை மேம்படுத்துதல், வருவாயை பெருக்குதல் உள்ளிட்ட காரணங்களுக்காக புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிவ்தாஸ் மீனா அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.