இந்தியாவோடு போர் புரிந்து பாகிஸ்தான் பலமுறை தோல்வி கண்டுள்ளதால் மீண்டும் அதுபோன்று முட்டாள் தனமான முடிவை எடுக்காது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் புதியதலைமுறை செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலை பார்க்கலாம்.
கேள்வி: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் பாகிஸ்தானிடம் இருந்து ஏதேனும் மிரட்டல் வந்திருக்கிறதா?
பதில் : கடந்த காலங்களில் போர் என்று வந்தபோது எப்படி இந்தியா பதிலடி கொடுத்தது என்பதை பாகிஸ்தான் நன்கு அறியும். 1965, 1971 மற்றும் கார்க்கில் போர் நடந்தபோது பாகிஸ்தான் நம்மிடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டது. எனவே கடந்த காலங்களில் செய்த முட்டாள்தனத்தை மீண்டும் பாகிஸ்தான் செய்யாது என நம்புகிறேன்.
கேள்வி : போர் என்று வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்தியாவின் எதிர்வினைகள் எப்படி இருக்கும்?
பதில்: காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. அந்தப் பிரச்னைக்கு தற்போது தீர்வு ஏற்பட்டு விட்டது. தவிர காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. எனவே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை சீண்டுவதை விடுத்து உள்நாட்டு பிரச்னையில் கவனம் செலுத்துவதுதான் பாகிஸ்தானுக்கு நன்மை பயக்கும்.