அண்ணா பல்கலை. பேராசியர்களின் கண்டுபிடிப்பான ஆண்டிபயகிராம் pt web
தமிழ்நாடு

ஆன்டிபயகிராம் என்பது என்ன? நோயாளிகளுக்கு எப்படி உதவும்?-அண்ணா பல்கலை. பேராசிரியர்களின் கண்டுபிடிப்பு

நோய்த்தொற்றுகளை நீக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுப்பதற்காக குறைந்த விலை கொண்ட புதிய பரிசோதனை கருவியை கண்டுபிடித்துள்ளனர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.

PT WEB

கொரோனா காலத்தில் நோய்த்தொற்று மருந்துகளை அதிகளவு உட்கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு வருவதாக மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்திருந்தார். நமது உடலில் ஏற்பட்டுள்ள பாக்டீரியா தொற்றிற்கு ஏற்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகளை கொடுப்பதற்கு பரிசோதனை செய்வது அவசியம்.

பரிசோதனைக்கு தாமதம், பரிசோதனை முடிவுகள் வர தாமதம் என இருக்கும் நிலையில், ஆன்டிபயகிராம் எனும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள். பேராசிரியர் சங்கரன் தலைமையிலான குழுவினர் இணைந்து, பல்வேறு ஆய்வுகளுக்கு பின் இந்தக்கருவியை உருவாக்கியுள்ளனர்.

அதுவும் சோதனை செய்யப்பட்டு ஆறு மணி நேரத்திற்குள்ளாக முடிவுகள் துல்லியமாக வருவதால், நோயாளிக்கு சரியான நேரத்தில் சரியான மருந்து கொடுக்கப்படுவதாக தெரிவிக்கிறார் கருவியை உருவாக்கிய பேராசிரியர் சங்கரன். ஏற்கனவே கண்டறியப்பட்ட சோதனைக் கருவிகள் அதிக எடையோடும் நிபுணர்களால் மட்டுமே இயக்கக்கூடிய அளவிற்கு இருந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்டறிந்துள்ள ஆன்டிபயகிராம் கருவி நிபுணத்துவம் இல்லாதவர்களும் கையாளும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்பே இவை கண்டறியப்பட்டாலும் இரண்டு காப்புரிமைகள் தற்போதுதான் கிடைத்துள்ளன. மேலும் இதுவரை 30,000 மேற்பட்டவர்களின் மாதிரிகளை இந்தச் சோதனைக் கருவி மூலம் அளவிட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள் கண்டுபிடிப்பாளர். நீலம், மற்றும் பச்சை நிற ஒளியின் மூலம் நுண்ணுயிர்கள் குறித்து கண்டறியப்படுகிறது.

ஆண்டிபயகிராம் கருவியின் விலை ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே இருப்பதால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அதிக அளவில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.