தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று டெங்கு ஒழிப்பு தினம்: 40 வினாடிகளில் டெங்கு கண்டறியப்படும்

தமிழகத்தில் இன்று டெங்கு ஒழிப்பு தினம்: 40 வினாடிகளில் டெங்கு கண்டறியப்படும்

webteam

தமிழகத்தில் இன்று டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை ஆவடியில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் முழுவதும் இன்று ஒரேநேரத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். வீடுகள் அருகே தண்ணீர் மற்றும் மழைநீர் தேங்க விடக்கூடாது என்றும் பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே டெங்குவை முழுமையாக ஒழிக்க முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.

மேலும், “வியாழன் தோறும் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படும். டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 6 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு டெங்கு இருப்பது 40 வினாடிகளில் கண்டறியப்படும். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்களில் இன்று டெங்கு ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று விஜயபாஸ்கர் கூறினார்.