தமிழ்நாடு

சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.2 லட்சம் பறிமுதல்

webteam

சென்னை அசோக்நகர் மற்றும் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

புகார் அடிப்படையில் சென்னை அசோக் நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென ஊழல் தடுப்பு துறையினர் சோதனை மேற்கொண்ட‌னர். அப்போது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 900 ரூபாயை கைப்பற்றினர். இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 

இதற்கிடையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் உர மானியம் பெற விவசாயிடம் லஞ்சம் பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர் ராமச்சந்திரன் என்பவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் கைது செய்தனர். 
இதேபோல், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் சர்வே எண்ணில் திருத்தம் செய்ய அணுகியப்போது 65 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக சக்திவேல் என்பவர் புகார் அளித்தார். அதன்படி, அங்கு சென்ற ஊழல் தடுப்பு அதிகாரிகள் லஞ்சம் பெற்ற கோட்டாச்சியர் அலுவலக உதவியாளர் ரங்கசாமியை கைது செய்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் திருமண மண்டபத்திற்கு சுகாதார சான்றிதழ் வழங்க 6 ஆயிரம் ரூபாய் பெற்ற சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலக நேர்முக உதவியாளர் சுந்தரராஜ் கைது செய்யப்பட்டார்.