தமிழ்நாடு

3- வது நாளாக நீடிக்கிறது இஸ்லாமியர்களின் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்

3- வது நாளாக நீடிக்கிறது இஸ்லாமியர்களின் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்

webteam

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், காவல்துறையினரை கண்டித்தும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் 3-ஆவது நாளை எட்டியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை - வண்ணா‌ரப்பேட்டையில் வெள்ளியன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீஸ் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக சட்டப்பேரவையில் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், பெண்கள் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் திரளானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள 23 இஸ்லாமிய கூட்டமைப்பினரின் பிரதிநிதிகளுடன், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தனது அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, வரும் 19-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறினார்.

முன்னதாக, போராட்டத்தின்போது காயமடைந்த காவல்துறையினரை ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிஏஏவுக்கு எதிரான போராட்டம் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

சென்னை - வண்ணாரப்பேட்டையில் வெள்ளியன்று தொடங்கிய போராட்டம், இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது. இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது