தமிழ்நாடு

மத்திய தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டுக்கு மேலும் 3.10 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் வருகை

மத்திய தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டுக்கு மேலும் 3.10 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் வருகை

Veeramani

தமிழ்நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்காக மத்திய தொகுப்பிலிருந்து மேலும் 3 லட்சத்து பத்தாயிரத்து 150 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்து சேர்ந்தது.

கொரோனா தடுப்புக்கான பேராயுதமாக தடுப்பூசி போடும் பணிகளை தமிழ்நாடு அரசு முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. இதற்காக மத்திய தொகுப்பிலிருந்து மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து 3 லட்சத்து பத்தாயிரத்து 150 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. இவற்றைப் பெற்றுக் கொண்ட தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள மாநில சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே, தமிழகத்தில் உள்ள 3000 தொழு நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நாளை முதல் தொடங்க உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரொனா சிகிச்சை பிரிவை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நகராட்சி அலுவலகத்தில் மக்கள் பெருமளவில் குவிந்தனர். அதிகாலை 4 மணி முதலே அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தட்டுப்பாடு காரணமாக நாள்தோறும் 150 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் மணிக்கணக்கில் காத்திருந்து நேரம் வீணாவதாக டோக்கன் கிடைக்காத பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 மையங்களில் டோக்கன் முறையில் 3 ஆயிரத்து 350 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஆனால், டோக்கன் முறையில் ஒருசில இடங்களில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கூடங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாம்களில் 2,100 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சத்தியமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், உக்கரம் , புஞ்சைபுளியம்பட்டி மற்றும் தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இங்கு 2 ஆயிரத்து 100 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி தடுப்பூசி போடப்பட்டதால் காலையில் இருந்தே காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.