மழை pt web
தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை| காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது! மீட்பு பணிக்கு முப்படையும் தயார்!

வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

Rishan Vengai

வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருக்கும் நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழையானது இன்னும் நிற்காமல் பெய்தபடியே இருந்துவருகிறது. இன்றிரவு முழுவதும் மேகம் வலுவடைந்து அதி கனமழை இருக்கும் என கூறப்படும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு முதலிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்த மழை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதனால் அதிகப்படியான மழைபொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த இடத்தில் கரையை கடக்கும்..

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு முதலிய 4 மாவட்டங்களுக்கு அக்டோபர் 16-ம் தேதியன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அக்டோபர் 17-ம் தேதி சென்னைக்கு அருகில் நெல்லூர்-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீட்பு பணிக்கு முப்படையும் தயார்..

இன்று இரவு அதிகப்படியான மழைபொழிவு இருக்கும் என கூறப்பட்டிருக்கும் நிலையில், கனமழை தொடர்பான மீட்புப் பணிகளுக்கு முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

மழை

மேலும் தாம்பரம் விமானப் படை தளத்தில் மீட்பு மற்றும் நிவாரண ஹெலிகாப்டர்கள் தயார்நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.