தமிழ்நாடு

மின்வாரிய ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்குமா தமிழக அரசு?

webteam

மழை, புயல் மட்டுமல்ல கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும் மகத்தான மக்கள் சேவையாற்றி வருகிறார்கள் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள். உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் அவர்களை இன்னும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்காததுதான் வேதனையின் உச்சம்.

வழக்கமாக உயர் மின்னழுத்த கம்பிகளால் உயிருக்கு ஆபத்தை சந்திக்கும் மின்வாரிய ஊழியர்கள் இந்த முறை கொரோனா பெருந்தொற்றால் பேரச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரே வீட்டிற்குள் முடங்கியிருக்கும் சூழலில் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டிய மாபெரும் பொறுப்பு மின்வாரிய ஊழியர்களிடம் உள்ளது.

உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளை காக்க மருத்துவர்கள் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதற்கு மின்வாரிய ஊழியர்களின் சேவை முக்கியம். அந்த பணியை சிரமேற்கொண்டு செவ்வனே செய்யும் போது இதுவரை லைன் மேன் முதல் தலைமை பொறியாளர் வரை சுமார் 150 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். மக்கள் பணியில் உயிரை இழந்தாலும், அவர்களுக்கு அரசு அறிவித்த 5 லட்சம் இழப்பீடோ, இன்னபிற சலுகைகளோ கிடைக்காது, ஏனென்றால், தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் முன்கள பணியாளர்கள் அல்ல. அத்தியாவசிய பணியாளர்களாகவே கருதப்படுகின்றனர்.

மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்களுக்கு நிகராக பணியாற்றும் தங்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்காமல் இருப்பது வேதனையளிப்பதாக கூறுகிறார் பெயர் வெளியிட விரும்பாத தலைமை பொறியாளர் ஒருவர். சென்னை, கோவை, திருச்சி, என தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மின்வாரிய ஊழியர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு என மருத்துவமனைகளில் தனி கொரோனா சிகிச்சை வார்டுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதும் இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

எல்லா பேரிடர் காலங்களிலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப உறுதுணையாக, முதல் நபர்களாக ஓடி வரும் மின்வாரிய ஊழியர்களுக்கு இந்த இக்கட்டான சூழலில் அரசு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது.