கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜிஎஸ்டி வரி தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கேள்வி எழுப்பிய வீடியோ வைரலானது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால் அதில் கிரீம் சேர்த்தால் 18 விழுக்காடு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாக கூறி, ஒரே மாதிரியாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட வேண்டும் என கோரியிருந்தார் சீனிவாசன்.
இதுதொடர்பாக மறுநாளே நிர்மலா சீதாராமனும் விளக்கமளிக்க, நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன். இதற்கிடையே, கேள்வி கேட்டால் மன்னிப்பு கேட்கச் சொல்வதா என்ற பாணியில் இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில், ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். உணவக உரிமையாளர் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்தது ஆணவத்தின் உச்சம் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பாஜகவின் செயல் கீழ்த்தரமானது என்று விமர்சித்தார். குறிப்பாக, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, எளிமையாக்கப்பட்ட ஜிஎஸ்டி முறை வேண்டும் என்று வைக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளரின் கோரிக்கை ஆணவத்துடனும், முற்றிலுமாக அவமரியாதையுடனும் கையாளப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சையில், புதிதாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது அன்னபூர்ணா ஹோட்டல் தரப்பு. அந்நிறுவனத்தின் கிரீம் பன்னின் வீடியோவை பதிவிட்டதோடு, கிரீம் கூட்டல் பன், கிரீம் கழித்தல் பன்னுக்கு சமம் என எழுதியுள்ளது. தற்போது கிரீமும் பன்னும் சேர்ந்து இருப்பது கிரீமும் பன்னும் தனித்து இருப்பதற்கு சமமானதுதான், அதற்கு இருவேறு விதமாக வரி விதிக்க தேவையில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் மீண்டும் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த பதிவை முதலில் போஸ்ட் செய்துவிட்டு, பின்னர் டெலிட் செய்து ரீ போஸ்ட் செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அந்த போஸ்ட்டை மீண்டும் டெலிட் செய்துள்ளது ஹோட்டல் தரப்பு. இதனால், மாநாடு பட எஸ்.ஜே சூர்யா ஸ்டைலில், போஸ்ட்.. டெலிட்.. ரீ போஸ்ட்.. ரீ டெலிட்.. என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.