சேகர்பாபு, அண்ணாமலை pt web
தமிழ்நாடு

“தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப மாற்றி மாற்றி பேசுபவர் அண்ணாமலை” - அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

webteam

செய்தியாளர்: சந்தான குமார்

சென்னை புரசைவாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு கருணை இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு பேசியபோது... “நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என நினைக்காமல், சட்டமன்றத் தேர்தல் 22 மாதங்களில் வரும் என்பதால் அதற்கான பணிகளை இன்றே தொடங்கியதாக நினைத்து அனைவரும் உழைக்க வேண்டும்” என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு... “அண்ணாமலை தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப பேசும் நபர். அதாவது காலை ஒன்று, மதியம் ஒன்று, மாலை ஒன்று என பேசும் நபர். கோவையில் அண்ணாமலை என்ற தனி நபர் நின்றிருந்தால் அவர் டெப்பாசிட் கூட வாங்கி இருக்க மாட்டார். அவரும் ஒரு கட்சியின் நிழலில் மட்டுமே நின்றவர்.

Annamalai

குடும்பக் கட்சி என்று எங்களை சாடும் நபர்களுக்கு ஒன்றுதான் பதில், எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லா புகழும் எங்கள் தலைவருக்கு சென்று சேரும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பாளர்கள் அல்ல. அனைத்து தொகுதியிலும் முதல்வர் நிற்கிறார் என்றுதான் அறிவித்துவிட்டு போட்டியிட்டோம். எனவே தோல்வியில் பிதற்றும் நபர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

எப்படி 40க்கு 40 என கூறி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோமோ அதேபோல 2026 சட்டபேரவை தேர்தலில் 234 தொகுதியிலும் திமுக கூட்டணி திராவிட மாடல் சாதனைகளை முன்வைத்து வெற்றி பெரும். அந்த தேர்தலிலும் அண்ணாமலை நிற்கட்டும். அந்த தேர்தலில் டெப்பாசிட் பெறுவதற்கான நடவடிக்கையை இப்போதே அவர் தொடங்கட்டும். பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது குறித்து வேறு ஒரு கட்சி மட்டுமே யோசனை செய்ய வேண்டும்” என்றார்.