கோவையில் மாற்றத்தைக் கொண்டுவந்து விடக்கூடாது என்பதற்காக திமுகவும் அதிமுகவும் கைகோர்த்து இருப்பதாக கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளாரும், மாநில பாஜக தலைவருமான அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். நேற்றைய தினம் கோவையில் நடந்த பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அண்ணாமலை,
“தஞ்சாவூரை சேர்ந்த டிஆர்பி ராஜாவிற்கு என்று தனித்திறமை ஏதும் இல்லை. அவரது தந்தை பணம் சேர்த்து வைத்தார். இவர் அதைக்கொண்டு அரசியலுக்கு வந்தவர். டிஆர்பி ராஜா, தந்தையின் பணத்தைக்கொண்டு கோவை மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைத்து இருக்கிறார்.
கோவை மக்களை சில்லரை என்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டார். அந்த அளவிற்கு அரசியல் நாகரிகம் ஆகிவிட்டது. டிஆர்பி ராஜா அல்லது அவர் அப்பா டிஆர் பாலு என யார் வேண்டுமென்றாலும் வரட்டும். மக்கள் இந்த ஈசல்களை துரத்தி அடித்து விடுவார்கள்.
கோயமுத்தூர் மக்கள் ஃபீனிக்ஸ் பறவையைப் போன்றவர்கள். சுயமாக வேறு வேறு ஊரிலிருந்து இங்கு வந்து தங்கி சுயமாக வேலை செய்து இந்தியாவின் முக்கிய நகரமாக கோவையை மாற்றியிருக்கிறார்கள். கடின உழைப்பு என்ன என்பதை தெரிந்தவர்கள். சுயமரியாதை, நேர்மை, நாணயம் தெரிந்தவர்கள்” என்றார்.
இந்நிலையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் செய்தியாளர்கள் பாஜக குறித்து அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “களத்தில் எதிரியை கண்டறிந்து பணியாற்றினால் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறலாம். கோவையைப் பொருத்தவரை எதிரணியினர் டெபாஸிட் இழக்கும் அளவிற்கு திமுக வெற்றி பெறும். அற்புதமாண பணியை களப்பணியளர்கள் செய்து வருகின்றனர்” என்றார்.
தொடர்ந்து, ‘திமுக-வினர் மரங்கள், செடிகளை அழித்து ஆறுகளில் நீரை அள்ளியதால் கோவையில் 2 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது’ என்ற அண்ணாமலையின் கூற்றுக்கு பதிலளித்த டிஆர்பி ராஜா, “நான் இன்னும் அடுப்பையே பற்றவைக்கவில்லை…” என்று பதில் கூறியிருந்தார்.
மேலும் ‘தேர்தலுக்கு நான் ஒரு பைசாகூட கொடுக்கமாட்டேன்’ என்று அண்ணாமலை கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் டிஆர்பி ராஜா, “தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்யலாம், எதற்கு செய்யலாம் என்று சில வரைமுறைகள் உள்ளன. எங்கள் இயக்கத்தில் நண்பர்கள் தேர்தல் பணிக்காக வரும் பொழுது அவர்களுக்கு டீ காபி தொடங்கி பல செலவுகளை நாங்கள் செலவு செய்யவேண்டி இருக்கும். இதை எதிர்க்கட்சி தலைவர்கூட சொல்லியிருக்கிறார். பாஜகவிற்கு ஆட்கள் இல்லாததால் அவருக்கு செலவில்லை என்று நினைக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து பாஜக மற்றும் அண்ணாமலை குறித்து கேட்டதற்கு, “பிரதான எதிர்க்கட்சியான அதிமுக என்ன சொன்னதென கூறுங்கள்.. பதில் சொல்கிறேன். சில்லறை கட்சிகள் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. தேவையில்லாத விஷயங்களின்மீது கவனம் செலுத்துவது, கவனத்தை சிதறச் செய்யும். அதனால் தேர்தலில் வெற்றி பெற களத்தில் எதிரியை கண்டறிந்து பணியாற்ற உள்ளோம். நிச்சயம் தேர்தலில் வெற்றிபெறுவோம்”
இப்படியாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.