annamalai, minister mano thangaraj pt desk
தமிழ்நாடு

அண்ணாமலை VS அமைச்சர் மனோ தங்கராஜ்.. வலுக்கும் வார்த்தை மோதல்!

webteam

ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட்டை நிறுத்தி கொள்வதாக வெளியான தகவலுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கருத்து தெரிவித்திருந்தார். அவற்றில் அவர் அமைச்சர் மனோ தங்கராஜை கடுமையாக சாடியிருந்தார். பதிலுக்கு அமைச்சர் மனோ தங்கராஜூம் கருத்து தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் அமைச்சர் மனோ தங்கராஜ், “தனியார் நிறுவனங்களுக்கு சவாலே ஆவின்தான். ஆவின் மக்களுக்கான நிறுவனம். எங்கள் வேலையை இன்னும் துரிதப்படுத்தி வெகு விரைவில், எந்த நிறுவனமும் ஆவினுக்கு சவால் விடும் நிலையில் இல்லை என்ற அளவுக்கு கொண்டு வருவோம்” என்று பதிவிட்டிருந்தார்.

ஆவின், மனோ தங்கராஜ்

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் இன்று காலை பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம், நான் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டியிருக்கிறார். இதனை 48 மணி நேரத்தில் ஆதாரத்துடன் வெளியிட வேண்டும். இல்லை என்றால், அமைச்சர் பதவியை மனோதங்கராஜ் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு எக்ஸ் வலைத்தளத்தில் பதில் அளித்துள்ள மனோ தங்கராஜ், தனது கருத்து ஆதாரத்துடன் கூடியது என்பதால் அதில் எள்ளளவும் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளார். மன்னிப்பு கேட்க தாங்கள் சாவர்க்கர் பரம்பரை இல்லை என்றும், பெரியாரின் பேரன்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இந்த மோதல் இன்னும் பெரிதானது.

இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை.... “கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம்.

ஏற்கனவே, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு, பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பயந்து பதிவை நீக்கியது போல, அவதூறு வழக்குக்குப் பயந்து கீழ்க்கண்ட இந்த பதிவை நீக்கிய கோழை நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை.

ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன். அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும். உங்களை போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு“ என்று குறிபிட்டிருந்தார்.

இதற்கு மீண்டும் பதிலளித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், “இவ்வளவு தானா!!! தம்பி அண்ணாமலை, தாங்கள் கால்ச்சட்டை போடுவதற்கு முன்பே (1988) பேச்சிப்பாறை நீர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், கனிம வள பாதுகாப்பு போராட்டம் என எத்தனையோ மக்கள் பிரச்சனைகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் நான் ஏறி இறங்கிய வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தம்பியின் மான நஷ்ட வழக்கை பார்த்து ஓடி ஒளியவா போகிறேன்?” என்றுள்ளார்.

இதற்கு அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார். அவர் அதில், “மனோ தங்கராஜ் போன்றோர் அரசியலில் இருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு; மனோ தங்கராஜின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. அமைச்சர் என்பதால் மரியாதை கொடுக்கிறேன்; என்னவேணாலும் பேசுவதற்கு இது பழைய பாஜக, அண்ணாமலை அல்ல; அதே பாணியில் திருப்பி அடிப்பேன்

அண்ணாமலை - மனோ தங்கராஜ்

ஐ.டி.துறையில் மனோ தங்கராஜ் செய்த பிராடு எல்லாம் DMK Part 2 Files-ல் கொடுத்து இருக்கிறோம்; அதெல்லாம் ஒருநாள் வெடிக்கும், எங்கையும் தப்பித்து போக முடியாது. ஆவின் அதலபாதாளத்தில் உள்ளது; நாங்க கொடுத்த ரிப்போர்ட் பொய் என்றால், பாஜகவில் இருந்து 5 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறேன்; ஆவின் நிறுவனத்திற்குள் அனுமதிக்க தயாரா?எல்லாவற்றையும் நான் படம் பிடித்து காட்டுகிறேன்; ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர்” என்றுள்ளார்.