அண்ணாமலை  ட்விட்டர்
தமிழ்நாடு

“டீ போடுவதற்கு கூட தகுதி வேண்டும்; உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த தகுதி இருக்கிறதா?” – அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை நெய்வேலி தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், டீ போடுவதற்கு கூட தகுதி வேண்டும். அந்த தகுதி உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கிறதா? என்று கேள்வியெழுப்பினார்.

webteam

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என் மண் என் மக்கள் யாத்திரையாக சென்ற அண்ணாமலைக்கு, சாலையின் இருபுறங்களிலும் கூடி நின்ற மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து நெய்வேலி ஆர்ச் கேட்டில் அவர் பேசியதாவது...

“இந்த மண்ணையும் மக்களையும் காக்க இந்த எழுச்சி யாத்திரை நடந்து வருகிறது. என்எல்சி நிறுவனத்தின் மீது பாஜகவும் கடுமையான விமர்சனங்களை வைக்கின்றோம். 1989 ஆம் ஆண்டிலிருந்து 35 ஆண்டுகளாக நிலம் கொடுத்தவர்களுக்கு இதுவரை நிரந்தர வேலை கொடுக்கவில்லை. இது குறித்து மத்திய நிலக்கரித்துறை அமைச்சருக்கு பாஜக ஒரு கடிதமும் எழுதி இருக்கிறோம். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழகத்திற்கும், மற்ற மாநிலங்களுக்கு 50 சதவீதமும் விநியோகிக்கப்படுகிறது. அதனால் இந்த நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு புதிய விதிமுறைகளை உருவாக்கி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.

அடுத்த நான்கு ஆண்டில் என்எல்சி நிறுவனத்தில் இருந்து 4,036 பணியிடங்கள் நமக்கு கிடைக்கப் போகிறது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர். அதனால் நிலத்தை கொடுத்தவர்களுக்கு உடனடியாக பயிற்சி கொடுத்து அவர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும். நிலத்தை கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இது என்எல்சி-யின் கடமையாகும். வேலை வேண்டாம் என்பவர்களுக்கு 17 லட்சம் நிதி கிடைக்கும். அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக அதனை இரட்டிப்பு செய்து 35 லட்சமாக கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாகும். இந்த நிறுவனத்தை பேருக்குத்தான் என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்துகிறது. ஆனால் இதனை நடத்தி வருவது எம்ஆர்கே.பன்னீர்செல்வம். ஆனால் எங்களுக்குதான் கெட்ட பெயர்.

என்எல்சியில் ஒப்பந்தம் எடுப்பது எல்லாம் திமுகவினர். ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளத்தில் ஐந்தாயிரத்தை எடுத்துக் கொண்டு பத்தாயிரத்தை தொழிலாளர்களுக்கு திமுகவினர் கொடுக்கின்றார்கள். சுரங்கத்தில் மண்ணை எடுத்து வெளியில் கொட்டுவதில் இருந்து அனைத்திலும் எம்ஆர்கே.பன்னீர் செல்வத்தின் பினாமிகள்தான் குவிகிறார்கள். இதனை நாம் உடைக்க வேண்டும். 'மீண்டும் மீண்டும் எம்எல்ஏ எம்பி ஆக வந்து என்எல்சி பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் அந்த அரசியலை வைத்து ஓட்டு வாங்க வேண்டும்' என்பது அவர்களது நோக்கமாக இருக்கிறது.

NLC

இந்த நிறுவனத்தின் மூலம் வழங்கக் கூடிய சிஎஸ்ஆர் நீதி 100 சதவீதத்தை திமுகவினர்தான் எங்கே கொடுக்க வேண்டும், எங்கே செலவு செய்ய வேண்டும் என முடிவு செய்கிறார்கள். என்எல்சி எங்கள் பேச்சைக் கேட்காவிட்டால் மாபெரும் போராட்டத்தை பாஜக அறிவிக்கும். மத்திய அரசு நிறுவனம் இங்கே இருந்தால் அது மக்களுக்காக இருக்க வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக இங்கே யாரும் பேசவில்லை. ஆனால் மத்திய அரசு நிறுவனம் இங்கே சிற்றரசர்களுக்கு சார்பாக நடந்து கொண்டிருக்கிறது. நிலத்தை கையகப்படுத்தினால் அதனை அவர்கள் எடுக்க மாட்டார்கள். ஆனால் விவசாயிகள் அதில் பயிரிட்டால் புல்டோசரை எடுத்துச் சென்று இடுப்பு உயரம் வரை வளர்ந்துள்ள பயிர்களை அழிப்பார்கள். நாங்கள் மேற்கண்ட ஏழு கோரிக்கைகளையும் மத்திய அரசுக்கும் நிலக்கரித் துறை அமைச்சருக்கும் அனுப்புவோம்.

கடந்த 2022ல் நடைபெற்ற அரசு தேர்வை 39538 பேர் எழுதினார்கள். ஆனால், இதுவரை பணி வழங்கப்படவில்லை. 2022ல் நடந்த குரூப்-2 தேர்வில் ஒன்பது லட்சம் பேர் எழுதினார்கள். அதில் 55071 பேர் மெயின் தேர்வெழுதி 116 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது. இதே போல குருப் 2 ஏ தேர்வெழுதி இதுவரை பணி வழங்கப்படவில்லை. 2023 இல் நடந்த குரூப்-1 தேர்வுக்கும் இதுவரை ரிசல்ட் வரவில்லை. குரூப்-4 தேர்வை 22 லட்சத்தி 45 ஆயிரத்தி 535 பேர் எழுதி வெறும் 10 ஆயிரத்து 205 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் அரசு வேலைகளை உருவாக்குவோம் என தேர்தல் வாக்குறுதியில் திமுகவினர் கூறியிருந்தனர். ஆனால் திமுக வெறும் 10,321 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளனர். அதனால் நமது இளைஞர் பொதுமக்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளனர்.

கடலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை நீங்கள் தேர்வு செய்து மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அப்படி நீங்கள் தேர்வு செய்யும் உறுப்பினர் இப்போது இருக்கும் எம்பியை போன்று குற்றம் செய்துவிட்டு ஓடி ஒழிய மாட்டார். அதனால் ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள். டீ போடுவதற்கு கூட ஒரு தகுதி வேண்டும். உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த தகுதி இருக்கிறதா? தகுதி இல்லாதவர்கள் 85 சதவீதம் உள்ளார்கள். படித்துவிட்டு வீட்டில் இருப்பவர்களின் கஷ்டம் உதயநிதிக்கு எப்படி தெரியும். ஆளத் தெரியாதவர்களே அரசாட்சியில் அமர்த்தினால் பேய் அரசாலும் என்பார்கள். அதனால் இவர்களுக்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியவில்லை.

விவசாய விளைபொருட்களில் இருந்து 20 சதவீதம் வரை எத்தனாலை தயாரித்து பெட்ரோலில் கலக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சி ஐஐடியில் நடந்து வருகிறது. இப்படி நடந்து விட்டால் என்எல்சி-யின் தலையெழுத்து மாறிவிடும். விவசாய நிலத்தை எப்படி பயன்படுத்துவது என யோசிக்கும் தொலைநோக்கு பார்வையைக் கொண்டது மோடியின் ஆட்சி. என்எல்சிக்கு எதிராக நாங்கள் மற்ற அரசியல் கட்சிகளைப் போல கண்களைக் கட்டி போராடுபவர்கள் அல்ல. எங்களுக்கு தீர்வு வேண்டும். நீங்கள் மனதில் வைத்து மத்திய அரசிடமிருந்து உங்கள் உரிமைகளை கேட்டு பெறக்கூடிய தகுதி வாய்ந்தவரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் எம்பி, கடந்த 35 வருடங்களாக நடக்காததை ஐந்து ஆண்டுகளில் செய்து முடிப்பார். அந்த வேலையை செய்யாவிட்டால் நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டோம். அந்த தகுதியான ஒரு நபருக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்.

பிரதமர் மோடி

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நெய்வேலிக்கு மிகவும் முக்கியமான காலம். 2024 இந்த தொகுதிக்கு ஒரு எம்பியை கொண்டு வந்து உங்கள் பிரச்னைகளை தீர்த்தால்தான் 2026ல் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பீர்கள். மோடி இருக்கும்போதே நம் பிரச்னைகளை தீர்ப்போம். அதனால் எங்களை நம்பி எங்களுக்கு ஓட்டு போடுங்கள். மத்தியில் ஆட்சிக்கு வருவது மோடி தான் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் இந்த நெய்வேலிக்கு பாஜக எம்பி வேண்டும். அப்போதுதான் நீங்கள் கேள்வி கேட்க முடியும். திமுகவினரை நீங்கள் கேள்வி கேட்க முடியாது” என்று பேசினார்.