செய்தியாளர்: மோகன்ராஜ்
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அம்மாபேட்டை ரவுண்டானா பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்... "முதல் சுற்றிலேயே மோடி அலை இந்தியா முழுவதும் செல்ல வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வருவதில் எந்த ஐயப்பாடும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தில் உலகளவில் ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது. தனிநபர் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது. ஆனால் I.N.D.I.A. கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது கூட தெரியாது. அவர்களால் பொருளாதார முன்னேற்றத்தை வழங்க முடியுமா?
கடந்த 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போதும் யார் பிரதமர் வேட்பாளர் என்று தெரியாமல் வெற்றி பெற்ற பிறகு திடீரென மன்மோகன் சிங் பிரதமர் என்று கூறினார்கள். அதில் பல்வேறு முரண்பாடுகள் இருந்தன. 2004ல் நடந்த கேலிக்கூத்து மறுபடியும் 2024ல் நடக்க வேண்டுமா என்பதை சிந்தியுங்ஙள்.
இந்தியா என்பது நமது முகவரி; நாட்டில் எங்கு பிரச்னை நடந்தாலும் நாடு முழுவதும் பாதிக்கும். காங்கிரஸ் ஆட்சியில் பல இடங்களில் குண்டு வெடிப்பு, பயங்கரவாதங்கள் நடந்தன. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். 10 ஆண்டுகளில் அவற்றை கட்டுப்படுத்தியுள்ளோம்.
இந்தியாவின் இறையான்மையை காப்பாற்ற கூடிய சக்தி I.N.D.I.A. கூட்டணிக்கு கிடையாது.. திமுக, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இந்தியாவை கூறுபோட்டு விற்றுவிடுவார்கள். ஸ்டாலின் சற்று திரும்பி பார்த்தால் கருப்பு புள்ளி இருக்கும். அவர் மீது கரையை வைத்துக்கொண்டு பாஜகவிற்கு அவர் பாடம் நடத்துவதை ஏற்க முடியாது.
காவல்துறையை ‘வாடர் போடா’ என பேசுபவர்கள் திமுகவினர். தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் செய்யாமல் சுடுகாட்டு கூரை ஊழலில் சிக்கியவரை சேலத்தில் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். தமிழகத்தில் திமுக ஓரு தேவையில்லாத ஆணி.
தமிழ்நாட்டு அரசியலில் பெண்களை திமுகவினர் போல் கேவலமாக பேசியவர்கள் யாரும் கிடையாது. திமுகவினருக்கும் பணத்திற்கும் தூரம் அதிகம். மத்திய அரசு கோபாலபுரத்திற்கு வழங்கும் தொகை மட்டும்தான் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்” என்றார்.