ஸ்டாலின், அண்ணாமலை புதிய தலைமுறை
தமிழ்நாடு

“கருப்பு பணத்தை பற்றி பேச முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு தகுதியில்லை” – அண்ணாமலை பேட்டி

"திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் இந்த ஆண்டு தண்ணீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து முதல் தீர்மானம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். திமுகவின் தீர்மானங்கள் பொய்யும், புரட்டுமாக உள்ளது" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

webteam

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக பாஜக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அண்ணாமலை, துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தமிழக அரசியலில் நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும் என சபதம் எடுத்துள்ளோம். இந்தியாவில் இதுபோன்ற ஒரு முதல்வர் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்களை காமராஜர் கொண்டு வந்துள்ளார். முதல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தவர் காமராஜர். 360° முதல்வராக அவர் இருந்துள்ளார்.

காமராஜரின் பல கனவுகளை இன்று பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில், கர்நாடகாவில் இருந்து இந்த ஆண்டு நீர் வரவில்லை என்பதை கண்டித்து தீர்மானம் இருந்திருக்க வேண்டும். இவர்கள் தீர்மானம் பொய்யும் புரட்டுமாக உள்ளது. தமிழகத்தின் உரிமை, நம் கண் முன் களவு போய்கொண்டுள்ளது. இவர்கள் கூறும் அனைத்து பொய்களுக்கும் பதில் கிடைக்கும்.

pm modi

ஜி.எஸ்.டி வந்த பின் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் வளர்ந்துள்ளது. தமிழகம் வளரவில்லை என்றால் அதற்கு காரணம் இவர்கள் 30 சதவீத கமிஷன் கேட்பது தான். ஒவ்வொரு மாநிலத்திலும் பண வீக்கம் எப்படி உள்ளது என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், குறைந்தபட்சம் பண வீக்கம் இருந்த ஆண்டுகளாக, கடந்த 9 ஆண்டுகள் உள்ளன. உணவு பொருட்கள் சம்பந்தமான பண வீக்கம் காங்கிரஸ் ஆட்சியில் மிகப் பெரிய அளவில் இருந்தது.

தமிழகத்தில் விவசாய உற்பத்தி மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது. விவசாய பட்ஜெட் போடுவதை கடந்து விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவில் உள்ள நபர்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது, தமிழ் அரைகுறையாக உள்ளது, ஹிந்தி ஜீரோ. அவர்களிடம் ஹிந்தி பேச யாரும் இல்லை, முதல்வருக்கு தமிழ் மட்டுமே தெரியும். அதனால் பாட்னா சென்று எதுவும் பேசாமல் வருகிறார். பிரதமர் பேசியது இவர்களுக்கு என்ன புரிந்தது? ஹிந்தி பேசும் நபர்களை முதல்வர் மற்றும் உதயநிதி உடன் வைத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் 15 லட்சம் தருகிறேன் என சொன்னதை இவர்கள் நிரூபித்தால், நான் ஒரு கோடி என்ன.. மூன்று கோடி கூட தருகிறேன்.

udayanithi

இவர்கள் பிரதமருடன் துணை நின்றால் செந்தில் பாலாஜி வெளிநாட்டில் வைத்துள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்து விடலாம். இந்தியாவில் கருப்பு பணம் வெளியே பதுங்கியுள்ளது என்றால் அதில் அதிகமாக பணம் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் பணம் தான். கருப்பு பணத்தை பற்றி பேச ஒருவருக்கு தகுதி இல்லை என்றால், அது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை சார்ந்த நபர்களுக்குத்தான்” என்றார்.