தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். அதில், பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் குடும்ப சொத்துக்கள் பற்றிய விவரங்களும் இடம்பெற்றிருந்தன. இதற்கு “அண்ணாமலை 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என டி.ஆர்.பாலு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், அதற்கு அண்ணாமலை தற்போது பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலையின் வழக்கறிஞர் பால் கனகராஜ் அளித்துள்ள பதில் நோட்டீஸில், “டி.ஆர்.பாலு மீதான சொத்துக் குவிப்பு குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களில் அவர் இப்போதும் உறுதியாக உள்ளார். அதனால் டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்க மாட்டார். ரூ.100 கோடி நஷ்ட ஈடும் வழங்கமாட்டார். டி.ஆர்.பாலு குறித்த எந்த ஒரு அவதூறு கருத்துக்களையும் அண்ணாமலை தெரிவிக்கவில்லை.
சொத்து மதிப்பு குறித்து அண்ணாமலை வெளியிட்ட அனைத்து தகவல்களும் உண்மையே. இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை அவற்றை வெளியிட்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தி.மு.க-வை சேர்ந்த மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சார்பிலும் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது; அதற்கும் அண்ணாமலை பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.