annamalai, minister mano thangaraj pt desk
தமிழ்நாடு

அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கு எதிராக அண்ணாமலை நோட்டீஸ் - எதற்காக தெரியுமா?

தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

webteam

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் அனுப்பியுள்ள நோட்டீசில், ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடைபெறுவதாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரை விமர்சிக்கும் வகையில் யூடியூப் சேனல் ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆவின் பால்

மான நஷ்டஈடாக ஒரு கோடி ரூபாயை ஆவின் வைப்பு நிதிக்கு வழங்க வேண்டும் என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களில் மன்னிப்பு கோரவும், மான நஷ்டஈடு வழங்கவும் தவறும் பட்சத்தில் சட்டரீதியாக வழக்கு தொடரப்படும் எனவும் அண்ணாமலை தரப்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இவ்விவகாரத்தில் தான் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவிருப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார். அதற்கு மனோ தஙக்ராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் அச்சமயத்தில் “மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்!” என பதிலளித்திருந்தார்.

இதற்கு அண்ணாமலையும் தொடர்ந்து காட்டமாக பதிலளித்த நிலையில், வார்த்தைப்போர் வலுத்தது குறிப்பிடத்தக்கது.