2024 மக்களைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட தொகுதியான கோயம்புத்தூர் தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் தொகுதி என்பதாலும் நரேந்திர மோடி ரோடு ஷோ செய்து வாக்க்கு சேகரிப்பில் ஈடுபட்டதாலும் அத்தொகுதிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. நிச்சயமாக பாஜக கோயம்புத்தூரில் வென்று காட்டும் என்று அண்ணாமலை தொடர்ந்து எல்லா பிரசாரங்களிலும் சொல்லி வந்தார்.
கடந்த மாதம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை times now ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “வருகின்ற தேர்தலில் பாஜக மொத்த வாக்குகளில் 25% வாக்குகளை மிக எளிதாகப் பெற்றுவிடும் என்று நான் உறுதியாகக் கூறுவேன். இதை நான் ஒரு மிகப்பெரிய தேசிய ஊடகத்தில் இத்தனை மக்களுக்கு முன் சவாலாகவே கூறுகிறேன்.
நீங்கள் வேண்டுமானால் வாக்கு எண்ணிக்கை நாளில் என்னை அழைத்துக் கேளுங்கள். நான் இங்கேதான் இருப்பேன். எங்கும் ஓடிவிடப் போவதில்லை. இவை எல்லாம் மீடியாவில் ரெக்கார்டு ஆவது தெரிந்துதான் என் அரசியல் நம்பகத்தன்மையை பந்தயமாக வைத்து பேசுகிறேன். ஏனென்றால் நாங்கள் களத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.
அதேபோல கடந்த ஏப்ரல் 12ம் தேதி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக பாஜக தைலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அந்த செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “திராவிட முன்னேற்றக் கழகம் பிஜேபியைப் பார்த்து பயப்படுகிறது. இந்த 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் திமுகவிற்கு டெப்பாசிட் கூட கிடைக்காது. ஏனெனில் மக்கள் திமுகவின் மீது கோபம் கொண்டு ஒரு எழுச்சியை எதிர்பார்த்து ரோட்டில் இறங்கி வந்து கைக்குழந்தையோடு நின்று பிஜேபியின் பிரச்சாரத்தைப் பார்த்துச் செல்கின்றனர். இவ்வளவு பெரிய எழுச்சி கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் நடந்துகொண்டிருக்கிறது. கோயம்புத்தூர் திமுக வின் கோட்டை என்று கூறும் அவர்களது பிம்பத்தை உடைத்து அரசியல் புரட்சியை நடத்த வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்” என்றும் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம் அண்ணாமலையில் இந்த தன்னம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. காரணம், கோவையின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 90840 வாக்குகள் பெற்றிருக்கிறார். பாஜக வேட்பாளர் அண்ணாமலையோ 70361 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.