தஞ்சையில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு புதிய தலைமுறை
தமிழ்நாடு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: ‘திமுகவைச் சேர்ந்தவர் கைது; முதலமைச்சர் எப்போது உணர்வார்?’-அண்ணாமலை

தஞ்சை மாவட்டத்தில் 4 பேர் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் செய்துள்ளார்.

Rishan Vengai

செய்தியாளர் - ந. காதர் உசேன்

என்ன நடந்தது?

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணொருவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த தெற்கு கோட்டை பகுதியை சேர்ந்த கவிதாசன் (25) என்பவருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அப்பெண் விடுமுறையில் தன் ஊருக்கு சென்றிருக்கிறார். இதை அறிந்து அப்பெண்ணின் வீட்டின் எதிரே ஆள் நடமாட்டம் இல்லாத கொட்டகை பகுதிக்கு சென்றுள்ளார் கவிதாசன். மேலும் தனியாக பேச வேண்டுமென்று கவிதாசன் அப்பெண்ணை அழைத்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில், அங்கு சென்ற இளம் பெண்ணை கவிதாசன் தன் நண்பர்களான பாப்பாநாடு பகுதியை சேர்ந்த திவாகர் (27), பிரவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேருடன் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.

Rape

இளம்பெண்ணை 4 பேர் வன்கொடுமை செய்த நிலையில், அவர்களில் ஒருவர் இக்கொடுமையை மொபைலில் படம் பிடித்துள்ளார். இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட பெண்ணை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அண்ணாமலை கண்டனம்..

இச்சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர், இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. திமுகவைச் சேர்ந்த, உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி கவிதாசன் உட்பட நான்கு பேரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் பெருகியிருக்கும் போதைக் கலாசாரம், பெரும் குற்றங்களுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே, காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கூட்டுப் பாலியல் வன்கொடுமை போன்ற மிக மோசமான குற்றம் தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.

போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுப்படுத்த இயலாமல், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல், தமிழகக் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. போதைப் பொருள் புழக்கத்திற்கும், ஆளுங்கட்சியினர் என்பதற்காகக் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், ஒரு சமூகமாக நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிகப் பெரியது என்பதை முதலமைச்சர் எப்போது உணர்வார்?” என்று கேள்வியை முன்வைத்துள்ளார்.