செய்தியாளர்: சாந்தகுமார்
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், தாம்பரம் சட்டமன்ற தொகுதி, காமராஜபுரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை...
“இதை அண்ணாமலையின் யாத்திரை, பாஜக யாத்திரை என்பதை விட, மக்களுடைய யாத்திரை என்றே சொல்ல வேண்டும். தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதியிலும் பாஜக வேட்பாளர்கள் வெல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் இதுவரை 17 நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்துள்ளன. நடைபெற உள்ள 18வது தேர்தலில் மோடிதான் வர போகிறார்.
33 மாத திமுக ஆட்சி, உங்கள் கனவை பூர்த்தி செய்யும் ஆட்சியாக இருக்கிறதா? எங்கே பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல், தமிழகத்தில் வளர்ச்சி என்பது கோபாலபுரம் வளர்ச்சிதான். மக்கள் வளர்ச்சி இல்லை. நாம் ஆட்சிக்கு வரும்போது பொருளாதார வளர்ச்சியில் 11 வது இடத்தில் இருந்தோம். இன்று 5வது இடத்தில் இருக்கிறோம்.
நாடு வளர்ந்தால்தான் வீடு கொடுக்கமுடியும், தண்ணீர் கொடுக்க முடியும், விவசாயிகளுக்கு 6000 வங்கி கணக்கில் கொண்டு வர முடியும், வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். பிரதமர் உங்கள் முன் நிற்பது அவருடைய வளர்ச்சிக்கு இல்லை, இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இன்னும் உழைக்க வேண்டும் என நினைக்கிறார்.
மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மாற்றி வைப்பதற்கு ஒரு பட்ஜெட். இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு. திமுக ஆட்சிக்கு வந்தால் 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை என்றார்கள்... ஆனால் கொடுக்கவில்லை. ஆனால், உதயநிதிக்கு மட்டும் அரசு வேலை. பட்ஜெட்டில் 60 ஆயிரம் பேருக்கு வேலை என்கிறார். ஆனால், 10,600 பேருக்கு மட்டும் TNPSC-யில் வேலை வழங்கியுள்ளனர்.
பொய்யை மட்டும் மூலதனமாக வைத்து மத்திய அரசின் மீது பழிபோட்டு ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது திமுக அரசுதான். 2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டுமென்றால் 2024ல் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்.
தமிழகத்தை கையில் வைத்துக் கொண்டு பாஜகவை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பங்காளிகள் இருவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். விட்டால் திரும்ப வராது... இதுதான் காலம். மோடி என்ற ஒற்றை மனிதரை நம்புங்கள், நம்பி வாக்களியுங்கள்” என்று பேசினார்.