அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வரும் தமிழ் வழி சிவில், மெக்கானிக்கல் பொறியியல் படிப்புகள் 11 கல்லூரிகளில் இந்த ஆண்டு நீக்கப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது வாபஸ் பெறப்படுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு அரசு பொறியியல் கல்லூரிகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பொறியியல் படிப்புகள் வழங்கி வருகின்றன. அந்த வகையில் அரசு பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி மெக்கானிக்கல், சிவில் படிப்புகளில் மிக குறைந்த அளவில் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
அதனால் ‘கீழ்க்காணும் இந்த 11 அரசு பொறியல் கல்லூரிகளில் தமிழ் வழி மெக்கானிக்கல் மற்றும் சிவில் படிப்புகளுக்கான இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது’ என அண்ணா பல்கலைக்கழகம் இன்று காலை அறிவித்தது
அந்த வகையில் இந்த ஆண்டு
‘தமிழ் வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகள் அரசு பொறியியல் கல்லூரிகளான திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோயில், தூத்துக்குடி ஆகிய 8 கல்லூரிகளில் நீக்கப்படுகிறது.
அதேபோன்று ஆரணி, விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரிகளில் மெக்கானிக்கல் தமிழ் வழி படிப்பு நீங்கப்படுகிறது.
தமிழ் வழி சிவில் படிப்பு திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியில் நீக்கப்படுகிறது’
என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
போலவே ஆங்கில வழி பொறியியல் படிப்புகளில் EEE படிப்பு திருக்குவளை அரசு பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டு நீக்கப்படுகிறது.
அரியலூர், பட்டுக்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் ஆங்கில வழி பொறியியல் படிப்புகளும் இந்த ஆண்டு நீக்கப்படுகின்றன என்ற அறிவிப்பு இன்று காலை வெளியானது.
இந்நிலையில், “தமிழ்வழி படிப்புகள் சில நிறுத்தப்படும் என்ற உத்தரவை அண்ணா பல்கலைக்கழகம் திரும்ப பெற்றது” என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தற்போது தகவல் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள், கல்வியாளர்களிடையே அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு கடும் எதிர்ப்பை கிளப்பியதாலேயே அவை திரும்ப பெறப்பட்டுள்ளன என சொல்லப்படுகிறது. உயர்கல்வி துறை அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில்தான் அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.