தமிழ்நாடு

”தேவா, வடிவேலு உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தோமா” - அண்ணா பல்கலை. விளக்கம்!

”தேவா, வடிவேலு உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தோமா” - அண்ணா பல்கலை. விளக்கம்!

சங்கீதா

இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் சிலருக்கு போலியான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதற்கும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் தனியார் அமைப்பு ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கம் அரசு நிகழ்ச்சிக்காகவும், அரசுடன் இணைந்து செயல்படும் தனியார் அமைப்புகள் மற்றும் தன்னார்வ மாணவர்கள் அமைப்புகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்தது. "இன்டர்நேஷனல் ஆன்டி கரெப்க்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில்" என்ற அமைப்பை சார்ந்த ஹரிஷ் கடந்த நவம்பர் மாதம் 10-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கை வாடகைக்கு கேட்டுள்ளார். அதற்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கையெழுத்திட்ட லெட்டர் பேடுடன் வந்து மீண்டும் கடந்த ஜனவரி மாதம் அனுமதி கேட்டு உள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதியின் கடிதம் என்பதால் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி திரை பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தது எங்களுக்கு தெரியவந்தது.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி பட்டம் வழங்கப்பட்டிருப்பதாக செய்திகளும் வெளியாகி இருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு முன் சிண்டிகேட் கூட்டம் கூடிய பிறகு, முறையாகத்தான் பட்டமளிப்பு விழா நடைபெறும். இங்கு நடைபெற்றது அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அல்ல.

இங்கு நிகழ்ச்சி நடத்தியவர்களை தொடர்பு கொள்ளும்போது அவர்களது தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் அவர்களை தொடர்பு கொள்ளும் போதும் பதில் ஏதும் கிடைக்கவில்லை. அனுமதிக்காக அவர்கள் வழங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் போட்டிருந்த கையெழுத்து லெட்டர் பேடும் போலியானதாக இருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தியிருந்தால் எங்களது வழக்கறிஞரின் ஆலோசனையின் படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் அழிக்கப்படும். இனி தனியார் நிகழ்ச்சிகளுக்கு கேளரங்கத்தை வாடகைக்கு விடக்கூடாது என முடிவு எடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

அரை நாள் நடைபெற்ற இந்த போலி பட்டமளிப்பு விழாவிற்கு 50 ஆயிரம் ரூபாய் வாடகையாகவும், எட்டாயிரம் ரூபாய் மின்சாரக் கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவும் வசூல் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் விருது நிகழ்ச்சி என்று நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் அண்ணா பல்கலைகழகம் என்பதை பெரிதாக அச்சிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களில் மட்டுமே அச்சிடக்கூடிய அரசு முத்திரையும் சட்ட விரோதமாக அச்சிட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணா பல்கலைகழகமே தங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக விழாவுக்கு வந்திருந்தவர்கள் நம்பி விட்டதாகக் கூறப்படுகிறது

இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், கஜராஜ், நடன இயக்குனர் சாண்டி, ஈரோடு மகேஷ், யூ-ட்யூப்பில் பிரபலமான கோபி, சுதாகர் உள்ளிட்ட சில பிரபலங்களை முன்னிறுத்தி 50-க்கும் மேற்பட்டோருக்கு கௌரவ டாக்டர் போலி பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் பெறுவதற்கு வராமல் வீட்டிலேயே இருந்த வடிவேலுக்கு வீடுதேடிச் சென்றும் பட்டம் வழங்கிய வீடியோவும் வெளியானது குறிப்பிடத்தக்கது.